Viral Video: பாகிஸ்தானில் முடியும், இந்தியாவில் சாத்தியமா? விளையாட்டை விழுங்கிய அரசியல்? வைரல் வீடியோ
Viral Video: விராட் கோலி சதம் விளாசியதை பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Viral Video: பாகிஸ்தான் வீரர் ஒருவரை இந்தியாவில் பொதுவெளியில் கொண்டாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விராட் கோலி அபாரம்..!
சாம்பியன்ஸ் ட்ராபியில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில், இந்தியா 242 ரன்களை சேஸ் செய்தது. அப்போது விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 100 ரன்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதன் மூலம், இந்திய அணி அரையிறுதிக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்:
இந்நிலையில் தான், விராட் கோலி சதமடிப்பதை கண்டு பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்நாட்டின் முர்ரி நகரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, பொதுவெளியில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் திரண்டு போட்டியை கண்டுகளித்தனர். அப்போது, கோலி பவுண்டரி விளாசி சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த காட்சிகளை கண்டு, அங்கிருந்த பெரும்பாலான ரசிகர்கள் உற்சாகமடைந்து துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தானில் உள்ள அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
இந்தியாவில் சாத்தியமா?
தங்கள் சொந்த நாடு தோல்வியுற்ற போதிலும், அரசியல் மற்றும் பூகோல ரீதியில் பரம எதிரியாக கருதப்படும் நாட்டைச் சேர்ந்த வீரரின் அபாரமான ஆட்டத்தை பாகிஸ்தான் மக்கள் கொண்டாடியுள்ளனர். ஒருவேளை முகமது ரிஸ்வான் அல்லது பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு, இந்தியாவை வீழ்த்தி இருந்தால், நம் நாட்டில் அவர்களது பெயரை சொல்லி கொண்டாட முடியுமா? என்பதே தற்போது கேள்வி. அதற்கு முடியாது என்று கூற பல காரணங்கள் உண்டு. உதாரணமாக கடந்த 2023ம் ஆண்டு உலகக் கோப்பையில், பெங்களூருவில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற்றது. அப்போது ஒரு ரசிகர் “பாகிஸ்தான் வாழ்க” என முழக்கமிட, அவரை தடுத்து நிறுத்திய காவலர் முழக்கமிடுவதை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலை தான் தற்போது இந்தியாவில் உள்ளது.
மோதல் போக்கு:
மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், “பாகிஸ்தான் வாழ்க” என முழங்கியதற்கே போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருக்கையில், இந்தியாவில் பொது வெளியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாக யாரேனும் முழங்கிவிட்டால், அவர் தேசதுரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழல் தான் இங்கு நிலவுகிறது. காரணம், பாகிஸ்தானுக்கு எதிரான நமது நாட்டின் அரசியல் நிலைப்பாடு, விளையாட்டை கூட கபளிகரம் செய்துவிட்டது என்பதே ஆகும். எல்லையில் மோதல் எண்பதை தாண்டி, ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் பாகிஸ்தானிற்கு எதிரான எண்னங்கள் கரைபுரண்டு ஓடுகின்றன. இதன் மூலம் நமது விளையாட்டின் மீதான காதலும் கூட கேள்விக்குறியாகவே உள்ளது.
விளையாட்டை விழுங்கிய அரசியல்:
விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையேயான பகைமையை மறந்து, ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் போற்றுவதற்கான ஒரு வழியாகும். அதனடிப்படையிலேயே உலக ஒற்றுமையை போற்றுவதற்காக, ஒலிம்பிக் விளையாட்டு உடன் கிரிக்கெட், கால்பந்து மற்றும் ஹாக்கி போன்ற விளையாட்டுகளுக்கான உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் நாடுகளின் நட்புறவுகள் மேம்படுவதோடு, எல்லைகளை கடந்து நல்ல திறமை எங்கு இருந்தாலும் அதனை கொண்டாடலாம் என்ற எண்ணத்தை பொதுமக்களிடையே விதைக்கும். ஆனால், இன்றைய நாளில் விளையாட்டுகள் வணிக நோக்கிலும், அரசியல் வெளிப்பாடாக மட்டுமே அணுகப்படுகின்றன. அதன் விளைவாகவே இந்தியாவில், பாகிஸ்தான் அனைத்து விதத்திலும் ஒரு எதிரியாகவே கருதப்படுகிறது. அதனை உணர்ந்த ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள தொலைக்காட்சிகள், ”பரம எதிரிகளின் மோதல்” என்பது போன்ற வாக்கியங்களை பயன்படுத்தி ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைக்கின்றனர். நமது வெறுப்பு உணர்வை அவர்கள் காசாக்க, அரசியல்வாதிகள் வாக்குகளாக்கி நினைத்ததை சாதிக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

