Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
தமிழ் திரையுலகின் இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட பாரதிராஜாவின் மகனாகிய நடிகர், இயக்குனர் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் மாபெரும் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் இமயம் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவரது மகன் மனோஜ் பாரதிராஜா. நடிகர், இயக்குனரான இவர் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். மனோஜின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிலும் மாபெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜா மகன்:
சிவாஜிக்கு முதல் மரியாதை படம் மூலமாக கம்பேக், ரஜினி - கமலுக்கு காலத்தாலும் அழியாத கதாபாத்திரங்கள், தமிழ் சினிமாவின் பல கிராமத்து காவியங்கள் என பல கோணத்தில் பல படங்களை இயக்கியது மட்டுமின்றி தமிழ் சினிமாவை கட்டி ஆளும் பல ஆளுமைகளையும் உருவாக்கிய பாரதிராஜாவிற்கு தனது மகனை மிகப்பெரிய நடிகராக்க வேண்டும் என்று ஆசை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாஜ்மஹால் படம் மூலமாக நாயகனாக அறிமுகமான மனோஜ் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் என பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் மிகப்பெரிய கதாநாயகனாக வலம் வர முடியவில்லை.
ரஜினிக்கே டூப்:
ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய அடையாளமாக திகழும் திரைப்படம் எந்திரன். இந்த படத்தில் விஞ்ஞானி ரஜினிகாந்த் கண்டுபிடித்த எந்திரன் ரஜினிகாந்தாக ரஜினிக்கு டூப் நடிகராக நடித்தவர் மனோஜ் பாரதிராஜாவே ஆவார்.
அந்த படத்தில் எந்திரனான சிட்டி ரஜினிகாந்த் கார் ஓட்டும் உள்ளிட்ட பல காட்சிகளில் ரஜினியாக மனோஜ் பாரதிராஜா நடித்துள்ளார். இதை அவரே ஒரு முறை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் பாரதிராஜா. பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்த் நடித்த பரட்டை என்ற கதாபாத்திரம் அவருக்கு பெரும் புகழையும், பெயரையும் பெற்றுத் தந்தது.
மார்கழி திங்கள்:
நடிகராக பெரியளவு ஜொலிக்க முடியாவிட்டாலும் இயக்குனராக வெற்றி பெற வேண்டும் எனற நோக்கத்திலே மனோஜ் பாரதிராஜா இயக்குனர் களத்தில் களமிறங்கினார். கடந்த 2023ம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படம் அவரது இயக்கத்தில் வெளியானது. சுசீந்திரன், பாரதிராஜா, ஷ்யாம், ரக்ஷனா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இறுதிவரை போராடிய மனோஜ்:
நடிகராக ஜொலிக்க முடியாவிட்டாலும் தனது தந்தை அளவிற்கு தமிழ் திரையுலகை புரட்டிப் போட இயலாவிட்டாலும் தான் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் மனோஜ் பாரதிராஜா இறுதிவரை போராடினார். கதாநாயகனாக இல்லாவிட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மூலமாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்று வாய்மை, சாம்பியன், ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்தார். இறுதிவரை ஒரே ஒரு வெற்றிக்காக போராடிய மனோஜ் பாரதிராஜா பெரிளவு ஜொலிக்காவிட்டாலும் அவரது தாஜ்மஹால், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா படங்கள் என்றும் அவரை ரசிகர்களுக்கு நினைவில் நிறுத்திக் கொண்டே இருக்கும்.
மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.





















