Sanju Samson:40 பந்துகளில் சதம்; பொளந்து கட்டிய சஞ்சு சாம்சன்! அரண்டு போன வங்கதேசம்
வங்கதேச அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம்:
வங்கதேச அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காட்டிய சஞ்சு சாம்சன், 2வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு திரும்பினார்.
40 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்:
இதன்பின் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து சஞ்சு சாம்சன் வெளுத்து வாங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் கட்டாயம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச வேண்டும் என்ற உறுதியுடன் சஞ்சு சாம்சன் பொளந்து கட்டினார். இதன் மூலமாக 22 பந்துகளிலேயே அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், பின்னர் அதிரடியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
🚨 SANJU SAMSON SMASHED 5 CONSECUTIVE SIXES IN AN OVER. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 12, 2024
- Ruthless Sanju at the Uppal. 🥶pic.twitter.com/lagJlSMMlM
இந்த நிலையில் 10வது ஓவரை வீசிய ரிஷாத் ஹொசைன் பவுலிங்கில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை சஞ்சு சாம்சன் விளாசினார்.சஞ்சு சாம்சன் மட்டுமின்றி சூர்யகுமாரும் அவரது வழக்கமான அதிரடி பாணியிலேயே விளையாடியதால் இந்திய அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்களை குவித்தது. தொடர்ந்து, ஒரு பவுண்டரை அடித்து 40 பந்துகளில் சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்தார். ஜெய்ஸ்வால், கில் உள்ளிட்ட வழக்கமான ஓப்பனர்கள் இல்லாத நிலையில் இந்த தொடரில் ஓப்பனராக களமிறங்கியிருந்தார் சஞ்சு சாம்சன்.
முதலிரண்டு போட்டிகளில் அவர் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் கூட இந்த போட்டியில் அனைத்தையும் சேர்த்து அடித்து மிரட்டிவிட்டார் எனலாம். சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 11 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களையும் விளாசி 111 ரன்கள் எடுத்தும், சூர்யகுமார் 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களையும் விளாசி 75 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சஞ்சு - சூர்யகுமார் இணை 173 ரன்களை குவித்தது. அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் அதே அதிரடியை தொடர்ந்தனர். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்களை குவித்தது.