British Parliament Felicitates Ganguly : பிரின்ஸ் ஆப் கல்கத்தாவிற்கு விருது...! கங்குலியை கவுரவப்படுத்திய இங்கிலாந்து..!
பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் சவ்ரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி மிகவும் ஆக்ரோஷமான கேப்டனாகவும், இந்திய அணியை வெற்றிகரமான அணியாகவும் வழிநடத்தியவர். ரசிகர்கள் இவரை செல்லமாக பிரின்ஸ் ஆப் கல்கத்தா என்றும், தாதா என்றும் அழைப்பார்கள்..!
அவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தி ப்ரைட் ஆப் பெங்கால் அதாவது வங்காளத்தின் பெருமை என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது தொடர்பாக, பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலி கூறியிருப்பதாவது, ஒரு பெங்காலியாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நான் கவுரவிக்கப்பட்டது மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதை நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் 6 மாதங்களுக்கு முன்பாகவே என்னைத் தொடர்பு கொண்டிருந்தனர்.” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்த விருது வழங்கப்பட்டு கங்குலி நேற்று கவுரவிக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2002ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இதே தினம் ஆகும். அந்த போட்டியில்தான் கங்குலி தனது டீ சர்ட்டை கழற்றி சுழற்றி எதிரணியை மிரளச் செய்திருப்பார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கங்குலி, “ ஆம். நான் அதை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். அது நடந்து நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. 20 வருடங்கள் ஆகிவிட்டது. இங்கிலாந்து அணியை இங்கிலாந்து மண்ணிலே வீழ்த்தியதை விட சிறந்த தருணம் எதுவும் கிடையாது. தற்போதுள்ள அணியும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் டி20 சீரியசை வென்றுள்ளனர். ஒருநாள் தொடரிலும் முன்னிலையில் உள்ளனர். எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 400 ரன்களை சேஸ் செய்தது பாராட்டுக்குரியது. 400 ரன்களை நான்காவது இன்னிங்சில் எட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. “ இவ்வாறு அவர் பேசினார்.
தோனிக்கு முன்பாக இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவ்ரவ் கங்குலி, வெளிநாட்டு மண்ணிட் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுத்தந்த முதல் கேப்டன், நாட்வெஸ்ட் தொடரை வென்ற கேப்டன். மினி உலககோப்பையை வென்ற கேப்டன். 2003ம் ஆண்டு இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்று பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவர் கங்குலி.
அதிரடி ஆட்டக்காரரான கங்குலி கேப்டன்சியில்தான் இந்திய அணிக்குள் சேவாக், ஹர்பஜன், யுவராஜ், தோனி, முகமது கைப், நெஹ்ரா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல வீரர்கள் அறிமுகமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்