தஞ்சையில் மின்விளக்குகளால் ஜொலித்த குழந்தை இயேசு ஆலய திருத்தேர் பவனி
இனம், மதம் , மொழி கடந்து அனைவரும் வந்து வழிபாடு பிரார்த்தனை செய்கின்றனர் . பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள கார்மெல் குழந்தை இயேசு ஆலயத்தில் ஆண்டு திருவிழாவில் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட குழந்தை இயேசுவின் மகிமை தேர்ப்பவனி நடந்தது.
தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை நிர்மலா நகரில் கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம் அமைந்துள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த திருத்தலத்திற்கு இனம், மதம் , மொழி கடந்து அனைவரும் வந்து வழிபாடு பிரார்த்தனை செய்கின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் கடந்த 8 நாட்களாக தினமும் மாலை திரு ஜெபமாலை, சிறப்பு திருப்பலி, குணமளிக்கும் ஜெப கொண்டாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நாள் முழுவதும் சிறப்பு திருப்பலிகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. மாலையில் ஜெபமாலை, நவநாள், பெருவிழா திருப்பலி கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட குழந்தை இயேசுவின் மகிமை தேரை தஞ்சை அடைக்கலமாதா ஆலய பங்குத்தந்தை ஜெயராஜ், திருத்த அதிபர் சுரேஷ்குமார், துணை பங்குத்தந்தை பிரபு மற்றும் கார்மெல் துறவற இல்ல பணியாளர்கள், துறவற சபை குருக்கள் ஆகியோர் முன்னிலையில் கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தேர்பவனி திருத்தலத்தில் இருந்து புறப்பட்டது. மிக்கேல் சமனஸ் எழுந்தருளிய தேர் முதலிலும், கார்மெல் மாதா எழுந்தருளிய தேர் அடுத்ததாகவும் புறப்பட்டு செல்ல அதைத்தொடர்ந்து குழந்தை இயேசு அருள்பாலித்த தேர் கிறிஸ்தவர்களால் இழுத்து செல்லப்பட்டது. மேலும் கிறிஸ்தவர்கள் பலர் தேரில் எழுந்தருளிய குழந்தை இயேசு முன்பு மலர் மாலைகளை வைத்து கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டனர்.
இந்த மூன்று தேர்களும் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை சென்று மீண்டும் திருத்தலத்தை வந்து அடைந்தது. இதனை முன்னிட்டு வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம், இயேசுவின் சகோதரிகள் சபை தலைமை நிர்வாகி மேரி புளோரா, மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல் அதிபர் சுரேஷ்குமார் தலைமையில் கார்மெல் சபை குருக்களும், கார்மெல் 3 மணி ஜெபக்குழுவினர், பௌர்ணமி ஜெப குழுவினர், திருத்தல தன்னார்வ தொண்டர்கள், மதர் தெரசா பவுண்டேஷன் குழுவினரும், பல்வேறு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களும் செய்திருந்தனர். தேர்பவனி முடிவடைந்ததும் நற்கருணை ஆசீர், அதன் பின்னர் கொடி இறக்கமும் நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

