சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம்பிடிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பழமையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் திருவிழா கடந்த 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்கள் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
Aarudhra Dharshan: நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனம்.. விரதம் இருக்கும் முறை.. முக்கியத்துவம் என்ன?
இந்நிலையில் கடந்த 18 -ஆம் தேதி துவங்கிய கொடியேற்றத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்ற நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடியேற்றத்தை அடுத்து கோயிலின் உள்ளே நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு கொடி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர், வேத மந்திரங்கள் ஓத கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனை, அர்ச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோயில் உள்ளே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து கொடியேற்றத்துடன் துவங்கியது 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான திருத்தேரோட்ட திருவிழா இன்று காலை துவங்கியது. விநாயகர் தேர் வீதியுலா துயங்கியதை தொடர்ந்து முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்காணோர் கலந்துகொண்டு திருத்தேர்களை வடம்பிடித்து இழுத்து வருகின்னர். நான்குமாட வீதிகளிலும் திரண்டுள்ள பக்தர்கள் வீதிகளில் மாக்கோலம் விட்டும் சிவ வாத்தியங்கள் இசைத்தும், சிவதாண்டவங்கள் ஆடியும் தங்களது பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நான்கு வீதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சுவாமிகளை வரவேற்கும் விதமாக பூரண கும்ப வரவேற்பு அளித்ததுடன் மா இலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐந்து தேர்களும் நான்கு மாடவீதிகளை வலம் வந்து மாலை தேர் நிலையை வந்து அடையும். விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.