Sabarimala Ayyappan Temple: நாளை நடைபெறும் மண்டல பூஜை.. சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு.. குவியும் பக்தர்கள்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி இன்று ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
![Sabarimala Ayyappan Temple: நாளை நடைபெறும் மண்டல பூஜை.. சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு.. குவியும் பக்தர்கள்.. Today Ayyappan Swami will be decorated in gold robe as Mandal Puja to be held tomorrow at Sabarimala Ayyappan Temple kerala Sabarimala Ayyappan Temple: நாளை நடைபெறும் மண்டல பூஜை.. சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு.. குவியும் பக்தர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/4f8f8eec128d0c139a1b12791a90ec371703558684257589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயில் மற்ற கோயில்களை போல் தினசரி நடை திறந்திருக்காது. மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. பக்தர்களின் வருகைக்கு ஏற்றவாறு தரிசன நேரத்தை அதிகரித்து தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன் தினம் மட்டும் 1.63 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட உள்ளது. திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் காணிக்கையாக கொடுக்கப்பட்ட தங்க அங்கி ஆறன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருக்கும். இது மண்டல பூஜைக்காக சபரிமலைக்கு பவனி கொண்டுவரப்படும். அந்த வகையில், கடந்த 23 ஆம் தேதி ஆறன்முழா கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. வழி நெடுகிலும் பக்தர்கள் தங்க அங்கியை தரிசனம் செய்தனர். இன்று மாலை பம்பையில் உள்ள கணபதி கோயிலுக்கு தங்க அங்கி சென்றடையும். சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை 6.15 மணிக்கு சபரிமலை கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனை ட்தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு ஐபய்ய சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. நாளை காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் மண்டல மகா பூஜை நடைபெறும். மண்டல பூஜை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை மண்டல பூஜை முடிந்து இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பின் டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதி கோயில் மூடப்படும். பின் மகர விளக்கு பூஜைக்காக ஜனவரி 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 15 ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி நடைபெறுகிறது.
இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)