Israel Strikes Iran: ஈரானின் இதயத்தில் அடித்த இஸ்ரேல் - ”தம்பி எங்களுக்கு சம்மந்தமில்லை” ஓடி வந்த அமெரிக்கா
Israel Strikes Iran: ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Israel Strikes Iran: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்:
ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அணுகுண்டுக்கான பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவதற்கான ஈரானின் ஒப்பந்தத்தை வென்றெடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் தொடர்பாக பதட்டங்கள் அதிகரித்ததால், தெஹ்ரானில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தின் மையத்தை" இஸ்ரேல் தாக்கியதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததோடு, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை "எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று திட்டவட்டமாக பேசியுள்ளார்.
நேதன்யாகு சொன்னது என்ன?
நாட்டு மக்களிடம் வீடியோவில் உரையாற்றிய நேதன்யாகு, “சில நிமிடங்களுக்கு முன்பு, இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது, இது இஸ்ரேலின் உயிர் வாழ்விற்கான ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையாகும். இந்த அச்சுறுத்தலை நீக்க பல நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும்" என்று பேசியுள்ளார். ஈரானின் இதயமாக கருதப்படும் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது
ஈரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் 'இறப்பு'
இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் ஒரு உயர் காவல்படை அதிகாரியும், இரண்டு அணு விஞ்ஞானிகளும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தெஹ்ரான் தரப்பிலிருந்தும் விரைவில் பதிலடி தரப்படும் என கூறப்படுகிறது.
Israel is officially attacking Iran right now.
— AnimalFarm1945 (@Farm1945A) June 13, 2025
The entire Israel are currently in bomb shelters as the sirens are going off nationwide pic.twitter.com/hkYANFCpBq
அமெரிக்கா விளக்கம்:
இதற்கிடையில், இந்த தாக்குதலில் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக "தனிப்பட்ட நடவடிக்கை" எடுத்ததாகக் கூறியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், "இன்றிரவு, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்தது. நாங்கள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடவில்லை, மேலும் எங்கள் முன்னுரிமை பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும். இஸ்ரேல் தனது தற்காப்புக்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று நம்புவதாக எங்களுக்குத் தெரிவித்தது. எனவே, ஈரான் அமெரிக்க நலன்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக்கூடாது," என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்:
தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் தெஹ்ரானில் இருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரேல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் அரசு நடத்திய முன்கூட்டிய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு மற்றும் அதன் பொதுமக்கள் மீது ஏவுகணை மற்றும் UAV (ட்ரோன்) தாக்குதல் உடனடி காலக்கெடுவிற்குள் எதிர்பார்க்கப்படுகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.





















