பெண்ணா!! வீட்டுக்கு போலாம்.. பெண் தொகுப்பாளரை வீட்டுக்கு அனுப்பிய தலிபான்கள்..!
தலிபான்கள் கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானை ஆட்சிபுரிந்து வந்தப்போது பெண்களின் கல்வி மறுக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் தேசிய வானொலி தொலைக்காட்சி செய்தித்தொகுப்பாளர் ஒரு பெண் என்பதால், இனி பணியினை நீங்கள் தொடர முடியாது வீட்டிற்கு செல்லுங்கள் என அனுப்பிய நிலையில் அப்பெண் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கத் தொடங்கிய அமெரிக்கப்படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைக்கத்தொடங்கிவிட்டனர். இதனால் பெரும் அச்சம் அப்பகுதியில் நிலவிவருகிறது. ஏனென்றால் தாலிபான்கள் கடந்த 2001-ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆப்கானிஸ்தானை ஆட்சிபுரிந்து வந்தபோது பெண்களின் கல்வி மறுக்கப்பட்டது. மேலும் பொது இடங்களுக்குச் செல்லவேண்டும் என்றால், முகத்தினை முழுவதுமாக மறைத்துக்கொண்டும், ஆண் துணையின்றி செல்ல முடியாது என்ற நடைமுறை இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது 20 ஆண்டுக்குப்பிறகு தலிபான்கள் ஆப்கான் தலைகர் காபூலை கைப்பற்றிய நிலையில் பெண்களுக்குப் பல்வேறு பணிகளில் முன்னுரிமை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளது. அதற்கேற்றால் போல் தான் ஆப்கானிஸ்தானில் பல வன்முறைப்போராட்டங்களுக்கு நடுவில், தாலிபான்களில் தலைவரைப் பெண் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்ததாக செய்திகள் எல்லாம் வெளிவந்தது. ஆனால் தலிபான்கள் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் உண்மைக்கு புறம்பானது என்றும், அங்கு பெண்களை நடத்தும் விதம் முற்றிலும் மாறானது என்பதனை ஒரு வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார் ஆப்கானிஸ்தான் தேசிய வானொலி தொலைக்காட்சி செய்தித்தொகுப்பாளரான ஷப்னம் தவ்ரான்.
Shabnam Dawran, Afghanistan’s National Radio Television news presenter: “I went to #RTA but they told me that the regime has changed. you are not allowed, go home". pic.twitter.com/xJ4XcpamRo
— Muslim Shirzad (@MuslimShirzad) August 18, 2021
தனது வீடியோவில், வழக்கம் போல தன்னுடைய ஷிப்ட் நேரத்தில் பணிக்குச் சென்றதாகவும், ஆனால் தன்னை அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். என்னுடைய ஐடி கார்டு அனைத்தையும் காட்டினாலும் தற்போது ஆட்சி மாறிவிட்டது. எனவே இனி உங்களுக்கு இங்கு இடமில்லை என்று தெரிவித்து விட்டதாக தேசிய வானொலி தொலைக்காட்சி செய்தித்தொகுப்பாளரான ஷப்னம் தவ்ரான் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனைப்பார்க்கும் போது நிச்சயம் 2001 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆப்கானிஸ்தானை தான் அனைவருக்கும் நினைவுப்படுத்துகிறது.
இதோடு மட்டுமின்றி அரசுப்பணிகளில் உள்ள பல பெண்களைத் தொடர்ச்சியாக பணியிலிருந்து தலிபான்கள் நீக்குவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த சூழலில்தான், ஆப்கன் தலைநகர் காபூலில் பெண்கள் கடந்த 2 நாள்களாக ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.