Seeman: நாதக செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி: சூளுரைத்த சீமான்!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக தனித்துத்தான் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் செய்ய மாட்டேன்
’’விஜய் வருகையால் நாதக வாக்குகள் குறையும் என தகவல்களைப் பரப்புகிறார்கள். நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக தனித்துத்தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டியிடுவோம்’’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள், பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகின்றன. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளே, தமிழ்நாட்டில் கூட்டணியில் இணைந்தே தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் நாம் தமிழர் கட்சி தனித்துச் செயல்பட்டு வருகின்றது.
முதல் நாளில் இருந்து தனித்தே போட்டியிடும் நாதக
தமிழீழ ஆதரவு கொண்ட நாம் தமிழர் கட்சி 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் நாதக போட்டியிடவில்லை. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன்முதலில் நாம் தமிழர் கட்சி போட்டியிருந்தது. அப்போதில் இருந்து தற்போது வரை நாதக கூட்டணி எதுவும் வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல போட்டியிடும் வேட்பாளர்களில் சரிபாதி பேர் பெண்கள் என்பதையும் கொள்கையாக அறிவித்து நாதக செயல்பட்டு வருகிறது. விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நாம் தமிழர் கட்சிக்கு கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.






















