தேர்தல் பயத்தால் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்புகின்றன - ஜி.கே.வாசன் விமர்சனம்
த.மா.கா கூட்டணிகளை அதிக கட்சிகளை சேர்க்கக்கூடியது கட்சி. பிரிக்கக்கூடிய கட்சி அல்ல. மத்தியில் என்.டி.ஏ., பா.ஜ., தமிழகத்தில் அ.தி.மு.க., த.மா.க., என ஒற்ற கருத்துக்கள் அடிப்படையிலே செயல்படுகிறோம்.

தஞ்சாவூர்: தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. இந்தியா கூட்டணி பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் மத்திய, மாநில அரசுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் த.மா.கா.,வின் டெல்டா மண்டல இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைவர் வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: த.மா.கா.,வின் நோக்கம் வலிமையான பாரதத்திற்கு துணை சேர்க்கும் வகையில், வளமான தமிழகம் தேவை. அதற்கு மத்திய அரசுக்கு ஆதரவான ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். பா.ஜ,.வை, தி.மு.க., எதிர் கட்சியாக பார்க்காமல், எதிரி கட்சியாக பார்க்கிறது.
தேர்தல் கண்ணோட்டத்திலேயே செயல்படுவதால், பல திட்டங்களை தமிழகத்திற்கு தி.மு.க.,வால் பெற முடியவில்லை. கண்மூடித்தனமாக மத்திய அரசு மீது குறைசொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசுடன் ஒத்தக்கருத்துள்ள ஆட்சி தேவை. தோல்வி பயத்தின் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. தொடர்ந்து, இந்தியா கூட்டணி பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் மத்திய, மாநில அரசுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
அதன் அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தேர்தல் வரும் சில மாதங்களுக்கு முன்பே, தேர்தல் ஜூரம் காரணமாக, ஒரு பொய்யை பல முறை சொன்னால், அது உண்மையாகி விடும் என நினைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்கள், பொய்யான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள்.
மக்கள் உங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் முதல் தேர்தல் பீகார் தேர்தலிலேயே இதற்கு தக்க பாடம் கற்றுக்கொடுப்பார்கள். பெருந்தலைவர் காமராஜர் போல, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்ற இரண்டு தலைவர்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்தார்கள். அவர்கள் ஜாதி, மதம், மொழி இவைகளுக்கு அப்பால் பட்டு மறைந்தும் மறையாமல் மக்கள் மனதிலே நிற்பவர்கள். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா குறித்து தவறான கருத்து கூறி இருந்தால் அது தவறு.
140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை மத்திய அரசு, மாநில அரசுகளோடு இணைந்து, மத்திய அரசு பல்வேறு சிறப்பான வியூங்களை அமைத்து, கோவிட் காலங்களில், இந்தியாவிலே வறுமைக்காக யாரும் கையேந்தாத நிலையை ஏற்படுத்தியது. 80 கோடி மக்களுக்கு இலவசமாக இன்றும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு வறுமை இல்லாத நாடாக மாற்றி வரும் நேரத்தில், உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளார்கள் என்பதை தமிழக அரசு புரிந்து, தெரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருப்பது என்பதை விட, தென் மாநிலங்களிலே தமிழகம் தான் சட்டம் ஒழுங்கில் மிக மோசமான மாநிலமாக உள்ளது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியாது என்பதை நிரூபித்து விட்டது. மக்கள் அரசினுடைய இயலாமையை புரிந்து கொண்டார்கள். தேர்தலிலே சரியான பாடம் புகட்டுவார்கள்.
மத்திய அரசினுடைய கல்வி கொள்கை, மாநில அரசினுடைய கொள்கை கல்வி கொள்கையை பார்த்தால், ஒரு சில மாற்றங்களை தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல துறைகளில் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு உண்டான ஒரு பாடத்திட்டம் தான் மத்திய அரசின் பாடத்திட்டம்.
சுலபமாக படிக்கலாம், யார் வேண்டுமானலும் நீட் எழுதாமல், டாக்டர் ஆயிடலாம் என தமிழக அரசு நினைக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களே நினைத்து பார்த்தால் சிந்தித்து பார்த்தால் புரிந்து கொள்வார்கள். கல்வியிலும் அரசியலை புகுந்த வேண்டாம். வாக்கு வங்கிக்காக தான் கல்வி துறையும் இருக்கிறது என தி.மு.க.,நினைத்தால் இது வருத்தத்திற்கு உரிய விஷயம். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளும் இந்திய அளவில், ஜெயிக்கக்கூடிய மாநிலங்களில் இந்த பிரச்சனை இருக்காது. தோல்வியை சந்திக்க கூடிய மாநிலங்களில், இந்த பிரச்சனை உள்ளது என்பது அதிசயமாக இருக்கிறது.
த.மா.கா., என்றைக்குமே எந்த கூட்டணியிலே இருந்தாலும் எடுத்துக்காட்டான கட்சியாகவே இதுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. த.மா.கா கூட்டணிகளை அதிக கட்சிகளை சேர்க்கக்கூடியது கட்சி. பிரிக்கக்கூடிய கட்சி அல்ல. மத்தியில் என்.டி.ஏ., பா.ஜ., தமிழகத்தில் அ.தி.மு.க., த.மா.க., என ஒற்ற கருத்துக்கள் அடிப்படையிலே செயல்படுகிறோம். பழனிசாமியின் சுற்றுப்பயணம் மூலம் நம்பிக்கை கொடுத்து வருகிறார்.
சிவகாசி வெடிவிபத்தில் மூன்று பேர் இறந்து இறந்துள்ளனர். 15 நாட்களுக்கு ஒரு முறை இது போன்ற செய்தி வருகிறது. எனவே தொழிலாளர்களின் பாதுகாப்பு தன்மையை அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மீனவர்கள் அதிகளவிலே கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசினுடைய அடாவடி தனத்திற்கு முடிவு தேவை. மீனவர்கள் அச்சமில்லாமல் கடலுக்கு செல்ல வேண்டும். கடல் கொள்ளையர்கள் மீதும் கண்காணிப்பு தேவை. இதை உறுதிபடுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





















