Engineering Admission: பொறியியல் மவுசு என்னாச்சு? காலியாக இருக்கும் 45 ஆயிரம் இடங்கள்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Engineering Admission 2025: 2025ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2025- 26ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நேற்று தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. பொதுப் பிரிவில் மொத்தம் 92,605 இடங்கள் காலியாக இருந்த நிலையில், 62,533 இடங்கள் நிரம்பி உள்ளன.
நிரம்பிய 64,629 இடங்கள்
அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 2101 இடங்கள் இருந்த நிலையில், 2096 இடங்கள் நிரம்பி உள்ளன. இதன்மூலம் பொதுப் பிரிவு மற்றும் 7.5 சதவீத இடங்கள் சேர்த்து மொத்தம் 64,629 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்று மாலை 5 மணிக்குள் மாணவர்கள், தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு பொறியியல் சேர்க்கைக்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
45 ஆயிரம் இடங்கள் காலி
இதனால் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 45 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக 2025ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். குறிப்பாக சுமார் 3.02 லட்சம் மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் 28,896 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
கலந்தாய்வு புள்ளிவிவரங்கள்
மொத்தம் 423 கல்லூரிகள் பங்கேற்ற இந்த கலந்தாய்வில், மொத்தம் உள்ள 1,87,227 இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. முதல் சுற்றுக் கலந்தாய்வில் 26,719 இடங்களும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் 54,552 இடங்களும் நிரம்பி இருந்தன. தொடர்ந்து மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் 64,629 இடங்களுக்கு தற்காலிக ஆணை வழங்கப்பட்டுள்ளநிரம்பியுள்ளன. இதன்மூலம் தற்போது மொத்தம் 1,45,900 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 45 ஆயிரம் இடங்கள் தற்போது காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் கல்வித்துறை அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தது.
துணைக் கலந்தாய்வு
எனினும் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளையுடன் (ஆகஸ்ட் 12) முடிவடைகிறது. இதன்மூலம் மேலும் சில பொறியியல் இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற நிலையில், இதில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






















