தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம்: அரசு அங்கீகாரம்! தமிழ் ஆர்வலர்கள் கொண்டாட்டம்! அறியாத ரகசியங்கள் இதோ!
நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்ததுடன், நூல்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். இந்த நூலகம் உலகத்தின் பொக்கிஷம் எனப் பாராட்டப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நூலகம் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும், அறிவுக் களஞ்சியத்துக்கு சரஸ்வதி மகால் நூலகமும் இன்றும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக உள்ளன. இதன் பெருமைக்கு உதாரணம் இங்குள்ள ஓலைச்சுவடிகள்தான். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, இந்தி என 49 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. 23,169 காகிதச் சுவடிகள், 1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுதப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்து ஆவணங்களும் உள்ளன.

அரிய வகை மூலிகைகள், மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய ஆச்சர்யமான குறிப்புகளும் உள்ளன. மருத்துவம் தொடர்பாகவும் சிகிச்சை தொடர்பாகவும் வியக்கவைக்கும் குறிப்புகள் இதில் அடங்கி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அனுமதி பெற்று இங்கு வந்து ஓலைச்சுவடி மற்றும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் முறை கடந்த சில வருடங்களாகவே நடந்து வருகிறது. இதேபோல், காகிதச் சுவடிகளும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் உலகில் முதன்மையானதாகவும் விளங்கி வருகிறது சரஸ்வதி மகால் நூலகம்.
தஞ்சையில் இப்படி ஒரு அறிவுக்களஞ்சியம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. சோழர்களால் சரசுவதி பண்டாரம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது என தெரிய வருகிறது. இந்த நூலகத்தில் பணிபுரிந்தவர்கள், சரசுவதி பண்டாரிகள் என்றழைக்கப்பட்டனராம். கி.பி 1122-ம் ஆண்டு முதலே இந்த நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கிறது என்பதும் தஞ்சையின் பெருமையில் பதியப்பட்டுள்ள மற்றொரு வைரக்கல்தான்.
அதன்பிறகு ஆங்கிலேயேர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் இந்த சரஸ்வதி மகால் நூலகம் பராமரிக்கப்பட்டு தற்போது பிரமாண்ட வளர்ச்சிகளை அடைந்துள்ளது. நூற்றாண்டுக்களை காலங்களைக் கடந்து பெரும் அறிவுப் பொக்கிஷமாக திகழ்கிறது. மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர், நூல்கள் மீது மிகுந்த ஆர்வம் வைத்திருந்தார். இதனால், நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்ததுடன், நூல்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். இந்த நூலகம் உலகத்தின் பொக்கிஷம் எனப் பாராட்டப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இந்நூலகம் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாகவும், தமிழ்நாடு பொது நூலக விதிகளின்படி அரசு உதவி பெறும் நூலகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அரசிதழில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் மானியம் இந்த நூலகத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் வெளியீடுகள், பழங்கால கையெழுத்து சுவடிகளைப் பாதுகாத்தல், நூலக அருங்காட்சியகத்தைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல், கையெழுத்து சுவடிகளை பேணுதல், கையெழுத்து சுவடிகளை டிஜிட்டல்மயமாக்குதல், நிர்வாகம் ஆகிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
நூலகத்தின் துணைச் சட்ட விதிகளின்படி, அதன் செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களுக்கு மானியத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தணிக்கையாளரால் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு, அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். நூலகத்தில் ஏதேனும் புதிய திட்டங்கள் அல்லது மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமானால், பொது நூலக இயக்குநரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்நூலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மானியங்கள் பயன்பாடு குறித்த காலாண்டு அறிக்கையை அரசுக்கு நூலக இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















