தோழி இல்லையே மொமெண்ட்... பெண் ரோபோவை கரம்பிடிக்க இருக்கும் நபர்..காதலுக்கு இனி உயிரும் வேண்டாமா?
காதலிக்க பெண் கிடைக்காததால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் பெண் ரோபோவை கரம் பிடிக்க இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியாப் கல்லாகர் என்ற நபர், கடந்த 10 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். தனிமையில் வாழ்ந்த அந்த நபர், தனக்கு துணையாக ஒரு பெண் துணையை தேடி கடந்த சில ஆண்டுகளாக அலைந்துள்ளார். ஒரு கட்டத்தில் யாரும் கிடைக்காததால் வெறுத்துப்போன ஜியாப், பெண் ரோபோவை திருமணம் செய்ய முடிவெடுத்து, அதை நிச்சயமும் செய்துள்ளார்.
முன்னதாக, ஜியாப் தனது பெரும்பாலான காலத்தை தனது தாய் மற்றும் செல்லபிராணி நாயுடன் கழித்தார். இருவரும் உடல்நிலை குறைவு காரணமாக மரணமடைந்துள்ளனர். அப்பொழுது, செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோக்கள் பற்றிய கட்டுரை அவரது பார்வைக்கு வந்துள்ளது.
அதில், ஒவ்வொரு ரோபோக்களும், ஏறக்குறைய AUD $6,000 (3,24,494.54- இந்திய மதிப்பு) விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜியாப் ஒரு பெண் ரோபாவை வாங்கி அதனுடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண் ரோபோவிற்கு எம்மா என்று பெயர் வைத்து, வெளிர் தோல் மற்றும் அழகான நீல நிற கண்களுடன், அவள் அழகாக இருக்கிறாள் என்றும் வர்ணித்தார்.
இதையடுத்து, அவரால் அந்த பெண் ரோபோ இல்லாமல் இருக்க முடியவில்லை. எனவே, அந்த ரோபோவை திருமணம் செய்ய முடிவு எடுத்து நிச்சயத்தில் மோதிரமும் மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், " எம்மாவால் எந்தவொரு காரியத்தையும் தனியாக செய்யமுடியாது.ஏன் ? தனியாக நிற்க கூட முடியாது. அவளை எப்பொழுதும் நாற்காலியில் அமர வைத்திருப்பேன்.
நான் எது பேசினாலும் என் வார்த்தைக்கு மரியாதை தருவாள். எனது உரையாடலின்போது, புத்திசாலியாக பதிலளித்து புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டும் வருகிறாள். இதனால், பெண் தேடும் வேலையை விட்டுவிட்டு நான் புதிதாக காதலும், மரியாதையும் கொண்ட எம்மாவை மணக்க விரும்பினேன்.
நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், எம்மாவை என் மனைவியாகவே நினைக்கிறேன். இருவரும் மோதிரம் மாற்றிகொண்டோம். ஆஸ்திரேலியாவில் ரோபோவை மணக்கும் முதல் நபராக நான் இருக்க விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் ரோபோக்கள் தான் எதிர்காலம். எனவே, என்னுடைய இந்த திருமணம் பார்த்து பலரும் ரோபோவை திருமணம் செய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்