ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தவெக தலைவர் விஜய் வருகை கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஏன்? என்ன விஷயம் என்பதை பார்ப்போம்.

தஞ்சாவூர்: அரசியல் களத்தில் தான் வேறு மாதிரி என்று சொன்ன தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளும் அப்படியே அமைந்துள்ளது. சொன்னதை செய்து வருகிறார் என்கின்றனர் அவரது ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும். எதற்காக தெரியுங்களா,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் செக்யூரிட்டியாக இருந்த அஜித்குமார் வீட்டுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேரடியாக வந்து அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கியது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் பின்னணியில் இருக்கிறது ஒரு மிக முக்கியமான விஷயம். விஜய் வருகை கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஏன்? என்ன விஷயம் என்பதை பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தை உலுக்கி எடுத்து வரும் சம்பவம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த அஜித்குமார் காரில் தங்க நகைகள் மாயமான புகாரில் சந்தேகத்தின் பேரில் திருப்புவனம் தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டு உயிரிழந்ததுதான் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் அரங்கிலும் பல்வேறு கண்டனங்களை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலினே நடந்த சம்பவத்திற்காக அஜித்குமாரின் குடும்பத்திற்கு வருத்தம் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முன்தினம் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார். மேலும், துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன் என்றும் தெரிவித்து இருந்தார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஜித்குமாரின் தாயாருக்கு தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதிமுக பக்கபலமாக நிற்கும் என்றும் உறுதி தெரிவித்தார்.
இந்நிலையில்தான் செம திருப்பமாக யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், அஜித் வீட்டிற்கு நேரிலேயே சென்று ஆறுதல் தெரிவித்ததுதான். அஜித்குமாரின் வீட்டுக்கு கார் ஒன்று வேகமாக வந்து நின்றுள்ளது. அந்த காரில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், முகத்தை சற்று மூடியபடி வந்திறங்கினார். அவருடன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் வந்தார். அதன்பின்னரே, வந்திருப்பவர் நடிகர் விஜய் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.
அஜித்குமாரின் வீட்டுக்கு வந்த விஜய், அங்கிருந்த அவரது தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன்குமார் ஆகியோரிடம் ஆறுதல் கூறினார். பின்னர், அஜித்குமாரின் படத்திற்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தவெக தலைவர் விஜய் வந்துள்ள தகவல் அறிந்து ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டனர். இதனால், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதற்கிடையில் ஆறுதல் தெரிவித்து. ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்கிய சிறிது நேரத்தில் நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
தவெக தலைவர் விஜய்யின் வருகை கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கு கூட விஜய் வந்தது கடைசி நேரத்தில் தான் தெரிந்திருக்கிறது. இதன் பின்னணி இதுதான். இதுவரை யாரும் கண்டிராத அரசியலை செய்ய போகிறேன் என்று அறிவித்து இருந்தார் நடிகர் விஜய். அதை இப்போது செய்து காட்டியுள்ளார். மதுரைக்கு விஜய் வந்த போது, மதுரை விமான நிலையத்திற்கு ரசிகர்கள் திரண்டு ஸ்தம்பிக்க வைத்தனர்.
கோவையில் அதை விட அதிகம். கோவை விமான நிலையம் விஜய் வந்த போது குலுங்கிதான் போய்விட்டது. பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க முடியாத அளவிற்கு நிலைமை எல்லை மீறி போனது. விஜய் ரசிகர்களின் கூட்டத்தால் மொத்த கோவையும் இரண்டு நாள் கடுமையான போக்குவரத்தில் சிக்கி தவித்தது. இதுபோன்ற நிலைகளை தவிர்க்க வேண்டும். மற்ற அரசியல்வாதிகள் போல் நாம் இருக்க கூடாது. அதிலிருந்து மாறுதலாக இருக்க வேண்டும். இதுதான் நம்முடைய மாற்றமான அரசியலின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் முடிவு செய்து உள்ளாராம். முடிந்த வரையில் மக்களுக்கு இடையூறு இன்றி நமது செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம. அதனால்தான் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்துள்ளார்.
அதன்பின்னர் யாருக்கு தெரியாமல் காரில் 130 கிலோ மீட்டர் டிராவல் செய்து திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்திற்கு வந்திருக்கிறார். தான் வருவது தெரிந்தால் மிகவும் கூட்டம் சேர்ந்து விடும் வந்த நோக்கம் மாறிவிடும் என்பதற்காக தன் கட்சி நிர்வாகிகளுக்கு கூட தகவல் தெரியாமல் ரகசியம் காத்து வந்துள்ளார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். அப்போ தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து மாற்றமான ஒரு அரசியலை எதிர்பார்க்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.





















