(Source: ECI | ABP NEWS)
Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..! திமுகவில் பரபரப்பு
'பெண்களுக்கு திமுக ஆட்சியில் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய பொன்முடிக்கு தேர்தல் வரை ஏந்த பொறுப்பும் கொடுக்க வேண்டாம் என முடிவு?’

பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசி, அதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியே எதிர்ப்பு தெரிவித்து கட்சி, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை இழந்தவர் பொன்முடி. இப்போது மீண்டும் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக்கொண்டு, பதவியை பெற கட்சி தலைமையிடம் காய்நகர்த்தி வருகிறார். அதற்காக அவர் தன் மாவட்டத்திலேயே, தன் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகவே சதி வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் உடன்பிறப்புகள்.
லட்சுமணன் மீது அதிருப்தி – அவருக்கு எதிராக பொன்முடி சதி ?
விழுப்புரத்தில் முடிசூடா மன்னனாக இருந்த பொன்முடி, தன்னுடைய செயல்பாடுகளால் கட்சி பொறுப்பு, அமைச்சர் பதவி என அனைத்தையும் இழந்துள்ள நிலையில், அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த விழுப்புரம், வானூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய பொறுப்பாளராக விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனை நியமித்து உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதிலிருந்து, தனக்கு எதிரான நடவடிக்கைகளில் பொன்முடி இறங்கியதாக அறிந்த லட்சுமணன், பொன்முடியின் புகைப்படத்தை கூட தன்னுடைய தொகுதிகளில் வைக்கும் பேனர்களில் போடுவதை தவிர்த்து வந்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொன்முடி, லட்சுமணனை இந்த தேர்தலோடு காலி செய்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருவதாக சொல்கின்றனர் விழுப்புரம் திமுகவினர்.
லட்சுமணன் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஸ்டாலின்
அதிமுகவின் முக்கிய முகமாகவும் வட மாவட்டங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பராக அறியப்படுபவரும், திமுகவை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் வரைமுறையின்றி விமர்சித்து வருபவருமான சி.வி. சண்முகத்தை 2021 தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தோற்கடித்தவர் லட்சுமணன். அதிலிருந்தே லட்சுமணன் மீது திமுக தலைமையின் கவனம் விழத் தொடங்கியது. அவருடைய செயல்பாடுகளும் சிறப்பாக இருந்து வந்த நிலையில், பொன்முடி மீது மக்கள் அதிருப்தியடைந்த சூழலில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக லட்சுமணனை நியமித்து உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பொன்முடி, அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகவும், அது இப்போது உச்சத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது.
சி.வி சண்முகத்திடம் பேசினாரா பொன்முடி ?
வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலிலும் விழுப்புரம் தொகுதியில் லட்சுமணன் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால், அவர் அமைச்சராக்கப்பட்டுவிடுவார் என்பதை அறிந்த பொன்முடி, எப்படியாவது லட்சுமணனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்தில் தனக்கு அடுத்து தன்னுடைய மகனான கவுதம சிகாமாணிதான் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்திலும் சி.வி.சண்முகத்திடமே டீல் பேசியிருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் தேர்தலில் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதிக்கு பதில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் லட்சுமணனை எதிர்த்து நின்று அவரை தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காக மறைமுகமாக தான் எல்லா உதவிகளையும் செய்வதாகவும் பொன்முடி, சிவி சண்முகத்திடம் டீல் பேசியதாக கூறப்படும் தகவல்தான் இப்போது விழுப்புரம் மாவட்டத்தின் ஹாட் டாப்பிக்.
தன்னுடையை கட்சி நிர்வாகியை தோற்கடிக்க எதிர்க்கட்சியுடன் ரகசிய கூட்டணியை பொன்முடி கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் கசிந்த நிலையில், இது குறித்து உளவுத்துறையும் களத்தில் இறங்கி விசாரித்து வருகிறதாம். விரைவிலேயே முதல்வரிடம் பொன்முடி குறித்த ரிப்போர்டை அவர்கள் சமர்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு தடை போட்டாரா பொன்முடி ?
இதுமட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டத்திற்கு அமைச்சர் யாரும் இல்லாத நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பொறுப்பு அமைச்சராக நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அவரை தனது மாவட்டத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், இங்கு உள்ளதை நானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் அவரை பொன்முடி தடுப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் பொன்முடிக்கு பதவியா ?
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட பொன்முடி, தனக்கு மீண்டும் பதவி தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பொன்முடிக்கு மீண்டும் பதவியை கொடுத்தால், அதையையே அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக மேற்கொண்டு திமுகவிற்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கி விடுவார்கள் என்பதால், தேர்தல் வரை எந்த முக்கிய பதவியையும் பொன்முடிக்கு தர வேண்டாம் என்று முதல்வருக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
உயர்நீதிமன்றம் அதிருப்தி
பெண்களுக்கு எதிராக பொன்முடி பேசிய வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க மாநில போலீஸ் தயங்கினால், வழக்கை சிபிஐக்கு மாற்றுவோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் பொன்முடிக்கு பதவியும் பொறுப்பும் கிடைப்பது குதிரை கொம்பாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில், பொன்முடிக்கு மீண்டும் பதவி தரப்படுவதை கனிமொழி ஏற்கவே மாட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி பதில்?
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடியை தொடர்புகொள்ள முயற்ச்சித்த பொது, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை, மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டும், இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை தொடர்பாக தொடர்புகொண்ட பொது அவர் அழைப்பை எடுக்கவில்லை.





















