தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
இந்த லாக்கப் சித்திரவதை குறித்து சினிமாத் துறையில் இருந்து எந்த ஒரு கண்டனமும் வரவில்லை என விமர்சனக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்தே கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ் சினிமாவில் முதல் ஆளாகக் குரல் எழுப்பியுள்ளார் நடிகர் சாந்தனு.
திருப்புவனம் அருகே கோயிலுக்குச் சென்றபோது கார்ல் இருந்த நகைகளைக் காணவில்லை என்றுகூறி நிகிதா என்பவர், கோயில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த விவகாரத்தில், அஜித் குமார் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார். உடலில் சிகரெட் சூடுகள், 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. அஜித் குமாரை காவலர்கள் கண்மூடித் தனமாக அடிக்கும் வீடியோவும் வெளியானது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த லாக்கப் சித்திரவதை குறித்து சினிமாத் துறையில் இருந்து எந்த ஒரு கண்டனமும் வரவில்லை என விமர்சனக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
பெனிக்ஸ் கொலைக்குப் பொங்கியெழுந்த திரையுலகம்
இதற்கிடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கடையை திறந்து வைத்திருந்தாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் நாட்டையுமே உலுக்கியது. அந்த சம்பவத்துக்கு எதிராக தமிழ் சினிமா நடிகர், நடிகைகள், கொதித்துப் போய் கண்டனக் குரல் எழுப்பினர்.
எனினும் தற்போது அஜித் குமார் கொலைக்கு எதிராக யாரும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக காவல்துறையின் வன்முறைக்கு எதிராகப் பேசிய படங்களில் நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் இதுவரை எதுவும் பேசவில்லை. பாதிக்கப்பட்ட நபராக நடித்த விஜய் சேதுபதி, தினேஷ் ஆகியோரும் பிற நடிகர்களும் எதுவும் பேசவில்லை.
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் உதய நிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்-ன் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் நடிகர்- நடிகைகள் இன்னும் இந்த விவகாரத்தில் மெளனம் கலைக்காமல் இருக்கிறார்களா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
சாந்தனு ட்வீட்
தவெக தலைவர் விஜய், அஜித் குமாரின் வீட்டுக்கே சென்று ஆறுதல் தெரிவித்த நிலையில், நடிகரும் பாக்யராஜின் மகனுமான சாந்தனு வாய் திறந்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அஜித் குமாரின் லாக்கப் மரணத்தில் இன்னொரு மனித உயிரை இழந்துள்ளோம். தாமதமாகப் பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனினும் மௌனம் ஒரு சரியான வழி அல்ல.
இன்னும் ஓர் அத்தியாயம், இன்னும் ஒரு வாழ்க்கை. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. #JusticeForAjithkumar என்று அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் சாந்தனு, தவெக தலைவர் விஜயின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.






















