தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பினார்.

திருப்புவனம் அஜித் லாக்கப் மரணத்தில் புகார்தாரரான நிகிதா, தனது கல்லூரிப் பணியிலும் சர்ச்சையில் சிக்கி மாணவிகள் எதிர்ப்புக்கு உள்ளான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
திருப்புவனம் கோயிலுக்குச் சென்றபோது நகைகளைக் காணவில்லை என்றுகூறி கோயில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த விவகாரத்தில், அஜித் குமார் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்குள்ளாக புகார்தாரரான நிகிதா மீது பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
நிகிதாவின் நீள் பின்னணி!
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா. 36 வயது அரசுக் கல்லூரிப் பேராசிரியரான இவர் கடந்த 2010ஆம் ஆண்டில், ஆசிரியர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அரசுப் பணிகளை வாங்கித் தருவதாய்க் கூறி பலரிடம் பண வசூலில் ஈடுபட்டுள்ளார். திருமங்கலம் பச்சக்கோப்பன்பட்டியை சேர்ந்த பலரிடம் 16 லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பணத்தை திருப்பிக் கேட்டால் அவர்களை மிரட்டவும் செய்துள்ளார்.
நிகிதாவிடம் பணம் ஏமாந்த ராஜாங்கம், தெய்வம், வினோத்குமார் எனப் பலர் திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் என 6 பேர் மீது 2011-ஆம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதைய துணை முதல்வரின் பி.ஏ.வைத் தெரியும் என்று கூறி அவர் மோசடி செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜித் குமார் மரணம் பேசுபொருளானதை அடுத்து, பல்வேறு தரப்பினர் மதுரை சுற்றுவட்டாரத்தில் புகார் அளித்து வருகின்றனர். திருமணம் செய்து, கணவரையும் அவர் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
கல்லூரிப் பணியிலும் சர்ச்சை
இதற்கிடையில் நிகிதா, தனது கல்லூரிப் பணியிலும் சர்ச்சையில் சிக்கி மாணவிகள் எதிர்ப்புக்கு உள்ளான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக பணியாற்றிய கல்லூரியிலும் பல புகார்கள் எழுந்து, கடந்த ஆண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியது தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ஆக நிகிதா பணிபுரிந்து வருகிறார். தனது துறைசார் பணிகளை முறையாக செய்யாதது, கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கியுள்ளார் நிகிதா.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
அவரை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பினார். எனினும் நிகிதாவுக்கு இருந்த செல்வாக்கால், அந்த அறிக்கை மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இப்போது நிகிதா மீது அடுக்கடுக்காகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கைது செய்யப்படுகிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.






















