நீட்டிக்கப்படும் அவசர காலச் சட்டம் ... முடங்கிகொண்டு போகும் பொருளாதாரம்
இலங்கையில் நீட்டிக்கப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தால் மேலும் மேலும் வீழ்ச்சி அடையும் பொருளாதாரம்.
இலங்கையில் நாடாளுமன்றத்தில் அமைச்சரவை ஒப்புதலுடன் அவசரகால சட்டம் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இதனை அரசு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வேலியாக பயன்படுத்துகிறதே தவிர, நாட்டின் வளர்ச்சி, நாட்டிற்கான வருமானம், மக்களின் பொருளாதார மேம்பாடு என்பன மேலும் மேலும் வீழ்ச்சி அடையும் செயலாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
அவசரகால சட்டம் நீடிப்பு என்பது இலங்கையின் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ,அரசு எது வேண்டுமானாலும் செய்யலாம். அப்படியான ஒரு அவசர கால நிலையை நீட்டிப்பு செய்து இருக்கிறது இலங்கை அரசு. ஆகவே இதன் காரணமாக சுற்றுலா துறை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாகவே சொல்லப்படுகிறது.
இவ்வளவு ஆண்டுகாலமாக இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாக வந்த அந்நிய செலாவணி முற்று முழுதாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதே போல் வெளிநாடுகளும் தமது நாட்டு மக்களை இலங்கைக்கு அனுப்ப தயங்குவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.அவசரகால சட்டம் என்பது எவர் மீதும் , தண்டனை பாயக்கூடிய வகையில் இருப்பதால் சர்வதேச நாடுகளில் இருந்து மக்கள் இலங்கைக்கு வர தயங்குகின்றனர். இதனால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் மேலும் வீழ்ச்சி அடையவே வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இலங்கையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த அவசரகாலச் சட்டத்தால் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணி முற்றும் முழுதுமாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார் .
இலங்கையில் போடப்பட்ட அவசரகால சட்டம் என்பது நாடாளுமன்றத்தின் மூலமாக நீக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த வேளையில் ,மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு இருப்பது வர்த்தகர்களுக்கும் ,சுற்றுலாத் துறையை நம்பி இருப்பவர்களுக்கும் பெரும் ஏமாற்றமாகவே இது அமைந்திருக்கிறது.
அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த நாடாளுமன்றத்தில் 120 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 63 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்ட அவசரகால சட்டத்தால் பல நாடுகள் தமது மக்களை இலங்கைக்கு சுற்றுலா அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் ,ஆதலால் இலங்கை மீதான ஒரு எதிர்பார்ப்பு என்பது குறைய தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.
இலங்கைக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பயண ஆலோசனைகளால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதில்லை என இலங்கை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நாடுகளுக்குச் செல்வோருக்கு காப்பீடுகளை வழங்க நிறுவனங்கள் முன் வருவதில்லை எனவும் சொல்லப்படுகிறது.
இலங்கையில் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக போடப்பட்ட சட்டங்களால் மேலும் மேலும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. பொதுமக்கள் பல மாதங்களாக வீதியில் இறங்கி போராடினாலும் அரசியல்வாதிகள் தத்தமது கட்சியையும் ,பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே சட்டங்களை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன.
இன்னும் சர்வதேச நாணய நிதியம், உலக நாடுகளும் இன்னும் இலங்கைக்கு உதவ ஒப்பந்தளவில் முன்வரவில்லை என்பது அண்மைய நிகழ்வுகளின் ஊடாக காண முடிகிறது.ஆகவே இலங்கை அரசு தற்போதாவது விழித்துக் கொண்டு , மக்கள் அரசியல்வாதிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்வதே சிறந்ததாகும்.