மதுரை மேயர் மாற்றம்? அமைச்சர்கள் பிடிஆர் மூர்த்தி இடையே பனிப்போர்- களத்தில் இறங்கிய முதல்வர்!
மதுரை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருபவர் இந்திராணி. இவர் அமைச்சர் பிடிஆரின் தீவிர ஆதரவாளர் என சொல்லப்படுகிறது.

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் அமைச்சர் மூர்த்தியின் தலையீடு இருப்பதாகவும் பிடிஆர் - மூர்த்தி பவர் வாரின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பனிப்போர்
மதுரை யாருடைய கோட்டை என்பதில் அமைச்சர் பிடிஆருக்கும் மூர்த்திக்கும் பனிப்போர் நிலவி வருவது தெரிந்த கதைதான். மதுரை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருபவர் இந்திராணி. இவர் அமைச்சர் பிடிஆரின் தீவிர ஆதரவாளர் என சொல்லப்படுகிறது. இந்திராணி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 57வது வார்டு கவுன்சிலரானார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில், அமைச்சர் பிடிஆர் சப்போர்ட்டில் மேயரானார். இந்திராணி மேயரானதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பலைகள் வீசின. அவரது பதவிப் பிரமாணத்தை கூட திமுக நிர்வாகிகள் பலரும் புறக்கணித்தனர்.
மேலும் இந்திராணி பொம்மை மேயராகவே செயல்பட்டு வருவதாகவும், அவரது கணவர் பொன் வசந்த்தான் நிர்வாகப் பணிகளை கையிலெடுத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தனது. அதே நேரத்தில் இந்திராணி தரப்புக்கும் அமைச்சர் மூர்த்தை தரப்புக்கும் காண்ட்ராக்ட் விவகாரங்களில் மோதல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மேயரும் மாற்றப்படலாம்
மேலும் தலைமை வரை இந்த விவகாரம் சென்றதாகவும் அதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் மேயரும் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பிடிஆர் ஆதரவாளரான இந்திராணி, மூர்த்தியுடன் அடிக்கடி சலசலப்புகளில் ஈடுபட்டு வந்ததாகவும், பவரை மொத்தமாக தன் கையில் எடுக்க நினைக்கும் மூர்த்தி, நேரம் பார்த்து காய் நகர்த்தி மேயரை காலி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கே.என்.நேருவை மதுரைக்கு அனுப்பி வைத்த முதல்வர்
அதே நேரத்தில் மதுரை மாநகராட்சியில் ஊழல் நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில், மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆக்ஷனில் இறங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். பிடிஆர், மூர்த்தி என மதுரையில் செல்வாக்கு பெற்றவர்கள் இருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலின் கே.என்.நேருவை மதுரைக்கு அனுப்பி வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளதும் கவனம் பெற்றுள்ளது.
மதுரை மாநகராட்சியில் இருக்கும் பெரும்பாலானோர் பிடிஆர் மற்றும் மூர்த்தியின் ஆதரவாளர்களாக இருப்பதால் இந்த விவகாரத்தில் மூன்றாவதாக ஒருவர் உள்ளே வந்தால்தான் தீர்வு கிடைக்கும் என ஸ்டாலின் நினைத்ததாக சொல்கின்றனர். அதுவும் பிடிஆர் - மூர்த்தி இடையே ஏற்கனவே மோதல் இருப்பதால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவையே நேரடியாக அனுப்பி வைத்து மதுரை விவகாரத்தை டீல் செய்துள்ளார் ஸ்டாலின்.























