Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
விழுப்புரம் ஓமந்தூரில் நடைபெற்ற பாமக-வின் செயற்குழு கூட்டத்தில், ராமதாசுக்கு முழு அதிகரம் வழங்கியும், அவரை மதிக்காத அன்புமணி மீது நடவடிக்கை கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று விழுப்புரம் ஓமந்தூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி மீது நடவடிக்கை கோரி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி
ஏற்கனவே, பாமக-வில் அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தை அன்புமணி புறக்கணித்தார்.
அது மட்டுமல்லாமல், அவரது தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில், பாமக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
விழுப்புரம் ஓமந்தூரில் நடந்த ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் முரளிசங்கர், இணை பொதுச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
மேடையில் வைக்கப்பட்ட பேனரில், அன்புமணி பெயரோ, படமோ இடம்பெறவில்லை. ஏற்கனவே, கடந்த 5-ம் தேதி, தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டிய ராமதாஸ், அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை கொடுத்தார்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில், கூட்டணி குறித்த முடிவை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும், கட்சியை பலவீனப்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தில் ராமதாஸ் பேசியது என்ன.?
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தனது வலி தெரியும் என்று குறிப்பிட்டார்.
தொண்டர்களை நினைத்து நினைத்து தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை, கூட்டணியில் தான் பாமக சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறிய ராமதாஸ், சட்டமன்ற தேர்தலில், ஏ, பி பார்ம்களில் கையெழுத்திடும் உரிமை தனக்கே உள்ளதாக தெரிவித்தார்.
அதனால், தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள், தங்களது விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொண்டார்.
இரு கூட்டங்கள், இருவேறு முடிவுகள் என்று சென்று கொண்டிருக்கும் இந்த தந்தை, மகன் மோதல், எங்கு போய் முடியும் என்றே தெரியவில்லை. முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கி, பிரசாரங்களையும் தொடங்கி விட்டன. ஆனால், பாமக, இன்னும் அதன் தலைவர் யார் என்றே முடிவு செய்யவில்லை. என்ன நடக்குமோ.?





















