`எதிர்காலத்தை உருவாக்குவோம்’ - துபாயில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ம்யூசியம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள்..
துபாயில் `எதிர்காலத்தின் அருங்காட்சியகம்’ என்ற சுற்றுலா தளம் பொது மக்களுக்குத் திறக்கப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி 22 அன்று, துபாயின் ஷேக் சையத் சாலையில் திறக்கப்பட்டுள்ளது இந்த அருங்காட்சியகம்.
துபாயில் `எதிர்காலத்தின் அருங்காட்சியகம்’ என்ற சுற்றுலா தளம் பொது மக்களுக்குத் திறக்கப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி 22 அன்று, துபாயின் ஷேக் சையத் சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், கடந்த பிப்ரவரி 23 முதல் பொது மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூப் இந்த எதிர்காலத்தின் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார். `உலகின் தலைசிறந்த இடங்களுள் ஒன்றான எதிர்காலத்தின் அருங்காட்சியகத்தின் இறுதிகட்ட பணிகளின் போது பொருத்தப்பட்ட இறுதி கட்டிடத் துண்டை நானே நேரடியாக பார்வையிட்டுள்ளேன். சுமார் 30 ஆயிரம் சதுர மீட்டர் அளவில், 7 அடுக்கு மாடி கொண்ட இந்தக் கட்டிடம் 77 அடிகள் உயரம் கொண்டுள்ளதாகவும், அதன் முகப்பில் ரோபோக்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 1024 அரேபிய எழுத்துகளும் பொருத்தப்பட்டுள்ளன’ என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தின் அருங்காட்சியகம் என்றால் என்ன?
இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காட்டும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தின் கருவிகள், விர்ச்சுவல் பயணங்கள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் முதலான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
நவீன பாணியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தின் வெளிப்புற முகப்பு முழுவதும் அரேபிய எழுத்துகளால் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உள்புறம் அந்தந்த பகுதிகளில் உள்ள கான்செப்ட் அடிப்படையில் மாறும் தன்மை கொண்டது. இதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதிநவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டு, இதனைப் பார்வையிட வருவோருக்கு புதுமையான அனுபவம் அளிக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் எதிர்காலத்தில் இருந்து கொண்டு வந்துள்ள திரைப்பட செட் போல உருவாக்கப்பட்டிருக்கும்.
இந்த அருங்காட்சியகத்தின் வெளிப்புற முகப்பில் இடம்பெற்றுள்ள அரேபிய எழுத்துகளில் மூன்று தொடர்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது கூறிய இந்த மூன்று தொடர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. நாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை. எனினும் நாம் நமது கற்பனைத் திறனால் உருவாக்குபவை நாம் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்கும்.
2. சிந்திப்பவர்களுக்கும், வடிவமைப்பவர்களுக்கும், அவற்றை செயலுக்குக் கொண்டுவருபவர்களுக்கும் மட்டுமே எதிர்காலம் சொந்தம்.
3. எதிர்காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. எதிர்காலத்தை நாம் இன்றே வடிவமைத்து, உருவாக்கலாம்.
சுமார் 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தொகை இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணமாகப் பெறப்படுகிறது. குழந்தைகள், குறிப்பிட்ட சில மக்கள், எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியோர் ஆகியோருக்கு நுழைவுக் கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தின் அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நுழைவுச் சீட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.