”தேர்தல் வந்தால் மட்டும் தான் அக்கறையா? தியாகி போல் பேசும் செந்தில் பாலாஜி” விளாசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தேர்தல் நெருங்கி விட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இருப்பது போல் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தியாகி போல் செந்தில் பாலாஜி பேசி உள்ளார்.

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் உயிரிழந்த மணிவாசகம் வீட்டிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது குடும்பத்துடன் அனைவரும் அவரது காலில் விழுந்து கண்ணீர் மல்க கதறி அழுதனர்.
மேலும், மணல் அள்ளுவதை தட்டி கேட்டதற்கு அனைவரும் சேர்ந்து அறிவாளால் வெட்டி கொன்று விட்டதாகவும், இரண்டு செல்போன்களை காவல்துறையினர் எடுத்துச் சென்றதாகவும், இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று உயிரிழந்த மணிவாசகத்தின் மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
செய்தியாளர் சந்திப்பு:
அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் 5 பேரை அறிவாளால் தாக்கியதில் மணிவாசகம் உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் சியா கமிட்டி மூலம் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் அனுமதி பெறப்பட்டது. தேர்தல் நடந்து முடிந்து திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கரூர் மாவட்டம், மல்லம்பாளையம் பகுதியில் மட்டும் மாட்டு வண்டி, மினி டிப்பர் லாரி, மினி பொக்லைன் ஆகியவற்றை பயன்படுத்தி மணல் அள்ளுவதாக கூறிவிட்டு காவிரி ஆற்றுப்படுகையில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகளை கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு துரோகம்
தேர்தல் பரப்புரையில் உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு துரோகம் (செந்தில்பாலாஜி) செய்தார். தற்பொழுது மீண்டும் தேர்தல் நெருங்கி விட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அக்கறை இருப்பது போல் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தியாகி போல் பேசி உள்ளார்.
தற்போது கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். அதற்கு கேடயமாக மாட்டு வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.
அதிகரித்து வரும் மணல் கொள்ளை:
கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மணல் கொள்ளை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது ஒரு உயிர் போயிருக்காது. இதற்கு முழு காரணம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி தான்.
மணல் கொள்ளை பிரச்சினைக்காக தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், வழக்கமான நடைமுறை போல் காட்டிக்கொள்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மணிவாசகம் வெட்டி கொலை செய்யப்பட்டார் அவர்கள் தம்பி குட்டி என்கின்ற யோகேஸ்வரன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தனையும் நடந்த பிறகு அரசு யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் என்று செந்தில் பாலாஜி கூறுகிறார்.
மணல் அள்ளுவதில் உடந்தை:
இன்னும் ஆறு மாதம்தான் உள்ளது. திமுக ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது தினசரி நடந்து வரும் நிலையில் வருவாய் துறை, காவல் துறை, வனத்துறை என அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். கையூட்டு பெற்றுக் கொண்டு மணல் கொள்ளைக்கு உதவியாக இருக்கின்றனர்.
மேலும், கடந்த தேர்தல் பரப்புரையின் போது கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மக்கள் மத்தியில் பேசிய காட்சிகளை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.






















