5ஆம் தேதிக்கு முன்பு போர் நிறுத்தம்.. ஹிஸ்புல்லா இயக்கத்தின் ட்விஸ்ட்.. ஏற்குமா இஸ்ரேல்?
சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்போம் என ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் வலுவாக இருக்கும் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் சூழலில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்போம் என ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.
போர்..போர்..போர்: மேற்காசியா முழுவதும் போரால் பற்றி எரிந்து வருகிறது. காசாவில் தொடங்கிய போர் ஈரான் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல்.
பதில் தாக்குதல் நடத்துகிறோம் என சொல்லி போரில் இறங்கிய இஸ்ரேல், பிரச்னையை மத்திய கிழுக்கு நாடுகள் முழுவதும் பரவ செய்துள்ளது. காசா போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது சிறிய சிறிய தாக்குதலை நடத்தி வந்தது லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா.
காசாவில் ஏற்கனவே 40,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம், லெபனானில் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஈரான், இஸ்ரேல் நாடுகள் இரண்டும் நேரடியாக போரில் குதித்துள்ளது.
பின்வாங்குகிறதா ஹிஸ்புல்லா இயக்கம்? இதற்கிடையே, இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதையடுத்து, ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்போம் என நைம் காசிம் கூறியுள்ளார். போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெற்ற நிலையில், நைம் காசிமின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, இதுகுறித்து பேசிய லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி, "வரவிருக்கும் மணிநேரங்களில் அல்லது ஒரு சில நாட்களில் போர்நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறேன். கவனமாக இருக்கிறோம். ஒருவேளை வரும் நாட்களிலோ, ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவோ (அமெரிக்கத் தேர்தலுக்கு முன்பாக) போர் நிறுத்தத்தை எட்டலாம் என்று அமெரிக்கத் தூதர் அமோஸ் ஹோச்ஸ்டீன் கூறி இருக்கிறார்" என்றார்.