Donald Trump: இந்தியாவை பகிரங்கமாக மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப் - மோடியின் நண்பர் இப்படி பேசலாமா?
Donald Trump: இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள, டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Donald Trump: அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் பிரேசிலும் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு வரி விதிப்போம் - ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சில அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது இந்திய அரசு விதித்துள்ள "அதிக சுங்க வரிக்கு" பதிலடி கொடுக்கும் வகையில், பரஸ்பர வரிகளை விதிக்கும் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அதே அளவு வரி நாங்களும் விதிக்கிறோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கிறோம். மேலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள். ஏறக்குறைய எல்லா சந்தர்ப்பங்களிலும், அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள், நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கவில்லை” என்றார்.
இந்தியாவிற்கு எச்சரிக்கை - ட்ரம்ப்
சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது, சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் பிரேசிலும் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், “எனக்கு பரஸ்பரம் என்ற சொல் முக்கியமானது, ஏனென்றால் யாரேனும் நம்மீது வரி விதித்தால், நாம் அவர்களுக்கு வரி விதிக்க வேண்டியதில்லையா? இந்தியா எங்களிடம் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால், அதற்கு நாங்கள் எதுவும் வசூலிக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்களும் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் 100 மற்றும் 200% வரி வசூலிக்கிறார்கள். அதன்படி, இந்தியாவும், பிரேச்லும் அதிக கட்டணம் வசூலிக்கிறது. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினால், அது பரவாயில்லை. ஆனால், இனி நாங்களும் அவர்களிடம் அதே கட்டணத்தை வசூலிக்கப் போகிறோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ட்ரம்பின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், "பரஸ்பரம்" என்பது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்றார். மேலும், "நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பொறுத்து தான், உங்களிடம் நாங்கள் நடந்துகொள்வது இருக்கும்" என்றும் விளக்கமளித்துள்ளார்.
மோடியின் நெருங்கிய நண்பர்
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப். இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும் ஆவார். அதேநேரம், இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியது முதலே, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறி வருகிறார். அண்மையில், டாலருக்கு மாற்றான நாணயத்தை பயன்படுத்துவது தொடர்பான, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், இந்தியா விதிக்கும் வரிக்கு நிகரான வரியை விதிப்போம் என்ற எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார். இது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

