IND vs BAN: இந்தியாவை அலறவிட்ட தெளகித் சதம்! ரோகித் படைக்கு வங்கதேசம் வச்ச டார்கெட் என்ன?
IND vs BAN 1st Innings Highlights: தெளகித்தின் அபார சதம், ஜாகர் அலியின் நிதானமான ஆட்டத்தால் வங்கதேச அணி இந்தியாவிற்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

IND vs BAN 1st Innings Highlights: பாகிஸ்தான் நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி நேற்று தொடங்கியது. இன்று இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன் ஆடி வருகிறது. இதில் வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. தன்ஷித் ஹாசன் - செளமியா சர்கார் தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர்.
35 ரன்களுக்கு 5 விக்கெட்:
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிகப்பெரிய தொடரில் களமிறங்கிய முகமது ஷமி தனது முதல் ஓவரிலே வங்கதேச அணியின் முக்கிய வீரர் செளமியா சர்காரை டக் அவுட்டாக்கினார். அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலே கேப்டன் ஷாண்டோ டக் அவுட்டானார். மெஹிதி ஹாசன் 5 ரன்னில் அவுட்டாக, நிதானமாக ஆடிய தன்ஷித் ஹாசன் 25 ரன்களில் அவுட்டானார். அக்ஷர் படேல் தனது சுழலில் முஷ்பிகிர் ரஹீமை ட்க அவுட்டாக்கினார்.
தெளகித் - ஹ்ரிதோய்:
35 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணிக்காக இளம் வீரர்கள் தெளகித் ஹ்ரிதோய் - ஜாகர் அலி ஜோடி சேர்ந்தனர். அக்ஷர் படேலுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைக்க, அந்த பந்தில் ஜாகர் அலி கைக்கே கொடுத்த கேட்ச்சை ரோகித் சர்மா கோட்டை விட்டார்.
35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் சேர்ந்த தெளகித் - ஜாகர் அலி இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர். முதலில் மைதானத்தில் நிலைத்து நின்ற இருவரும் ஓரிரு ரன்களாக எடுத்து வங்கதேசத்தை சரிவில் இருந்து மீட்டனர்.
150 ரன்களுக்கு அவுட்:
100 ரன்களை கடக்குமா? என்ற நிலையில் இருந்த வங்கதேசம் அணிக்காக இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி 150 ரன்களை கடக்க வைத்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசினர். ஜாகர் அலி நிதான ஆட்டத்தில் இருந்து அடித்து ஆட முயற்சித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 114 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 68 ரன் எடுத்து அவுட்டானார். 35 ரன்னில் சேர்ந்த இந்த பார்ட்னர்ஷிப் 189 ரன்னில்தான் அவுட்டானது. சுமார் 150 ரன்ளுக்கு மேல் பார்ட்னர்ஷிப் ரன்களை இந்த ஜோடி குவித்தது.
தெளகித் சதம்:
அவர் ஆட்டமிழந்தாலும் தெளகித் தனி ஆளாக வங்கதேச ரன்களை முன்னோக்கி நகர்த்தினார். கடைசி நிலை வீரர்களின் ஒத்துழைப்புடன் அவர் வங்கதேச அணி 200 ரன்களை கடக்க உதவினார். கடைசியில் வந்த ரிஷத் ஹோசைன் 12 பந்துகளில் 2 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுக்க 9வது ஓவருக்கு மைதானத்திற்குள் வந்த தெளகித் சதம் விளாசினார்.
கடைசியில் வங்கதேச அணி 49.4 ஓவர்களுக்கு ஆல் அவுட்டாகி 228 ரன்களை எடுத்தது. தெளகித் 118 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி தொடக்கத்தில் இருந்த நிலையில் 100 ரன்களை எட்டுமா? என்று இருந்தது. ஆனால், 24 வயதே ஆன தெளகித்தும், 26 வயதே ஆன ஜாகர் அலியும் இணைந்து வங்கதேசத்தை மீட்டனர்.
ஷமி அபாரம்:
இந்திய அணி சார்பில் முகமது ஷமி 10 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி தற்போது 229 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

