Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Mattu Pongal 2025: மாட்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எது? என்பன உள்ளிட்ட தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Mattu Pongal 2025: மாட்டு பொங்கல் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
களைகட்டும் மாட்டுப் பொங்கல்:
போகி பண்டிகையை தொடர்ந்து, தை திருநாள் எனப்படும் தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, மணல் பானைகளில் பொங்கல் செய்து, சூரிய பகவானுக்கு படையலிட்டு உலக நன்மைக்காக குடும்பத்தினருடன் சேர்ந்து பொதுமக்கள் வழிபட்டனர். அதனை தொடர்ந்து இன்று உழவர்களின் உற்ற நண்பனான, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்காக பொங்கல் வைக்க சிறந்த நேரம், விழாவின் முக்கியத்துவம் போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மாட்டுப் பொங்கல் வைக்க சரியான நேரம்:
கால்நடைகளை கொண்டாடுவதற்கும், மரியாதை செய்வதற்காகவும் மாட்டுப் பொங்கல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, மற்றும் கர்நாடகாவிலும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் நீடிக்கிறது. அதன்பட், இன்றைய நாளில் மாட்டு பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரமாக காலை 09.30 முதல் 10.30 வரையிலான நேரமும், மாலையில் 04.30 முதல் 05.30 வரையிலான நேரமும் அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.
மாட்டுப் பொங்கலின் முக்கியத்துவம்:
நாற்று நடுவதில் தொடங்கி, வயலை உழுவதில் இருந்து, அறுவடை செய்த நெல் போன்ற விவாசயப் பொருட்களை வீடு கொண்டு சேர்க்கும் வரையில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மறுபுறம் பசு மற்றும் எருதுகள், பால் கொடுத்து உணவு முறையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அத்தகைய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, மாடுகள் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு படையிலடப்பட்டு தெய்வங்களாக வணங்கப்படுகின்றன.
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்:
மாட்டுப் பொங்கல் நாட்களில் படையலை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட மாடுகள் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் அங்கு குவிய தொடங்கியுள்ளனர். மேலும், எருதுவிடுதல், மாட்டு வண்டி பந்தயம் போன்றவையும் இன்று தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ளது.