ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing: திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்வதற்கான, நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
ITR Filing: திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், புத்தாண்டை ஒட்டி இன்று (ஜன.15) வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றே கடைசி நாள்:
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2023 - 2024 நிதியாண்டிற்கான காலதாமதமான வருமான வரி அறிக்கைகள் அல்லது திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. முன்னதாக, கடந்த டிசம்பர் 31, 2024 அன்றுடன் முடிவடைய இருந்த காலக்கெடு, புத்தாண்டை ஒட்டி ஜனவரி 15, 2025 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்தது. அதன்படி, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு:
ஏற்கனவே ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், 2023 - 2024 நிதியாண்டிற்கான காலதாமதமான வருமான வரி அறிக்கைகள் அல்லது திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியோருக்காக இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன் மூலம், இந்த இரண்டு வகையைச் சேர்ந்த வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய கூடுதலாக இரண்டு வாரங்கள் அவகாசம் பெற்றுள்ளனர். அதோடு, ரூ.5000 அபராதம் என்ற சிக்கலில் இருந்து விடுபடவும் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி, திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய நபர்கள் இன்றைய நாளின் முடிவிற்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தாமதமான ITR மீதான அபராதங்கள்
ஜூலை 31, 2024 அன்று உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆரம்ப காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டாலும், தாமதமாகவும் நீங்கள் அதை தாக்கல் செய்யலாம். இருப்பினும், அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
- ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு தாமதக் கட்டணம் ரூ. 1,000.
- ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்திற்கு தாமதக் கட்டணம் ரூ. 5,000.
தாமதக் கட்டணத்தைத் தவிர, ஏதேனும் வரிப் பொறுப்பு நிலுவையில் இருந்தால், பிரிவு 234A இன் கீழ் நீங்கள் வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வட்டி மாதத்திற்கு 1% அல்லது அசல் நிலுவைத் தேதியிலிருந்து (ஜூலை 31, 2024) தாக்கல் செய்யும் தேதி வரை கணக்கிடப்படுகிறது.
ஜன.15 காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால்
ஜனவரி 15ம் தேதிக்குள் ITR ஐ தாக்கல் செய்ய தவறினால், 2023-24க்கான உங்கள் வருமானத்தை தாக்கல் செய்யவோ அல்லது திருத்தவோ இயலாமல் போகும்.
கூடுதல் அபராதங்கள்: தவறினால் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ்களைப் பெறலாம் மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம்.
சட்ட அறிவிப்புகள்: வரித்துறை பல ஆதாரங்களில் இருந்து வருமான அறிக்கைகளை சேகரிக்கிறது. வருமான வரிக் கணக்கை (ITR) சமர்ப்பிக்கத் தவறினால், வெளிப்படுத்தப்படாத வருமானத்திற்காக வழக்குகளை எதிர்கொள்ளலாம்.
நஷ்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் (Carry Forward Losses): ஆரம்ப காலக்கெடுவிற்கு முன் (ஜூலை 31) தாக்கல் செய்வது, எதிர்கால வரிக் கடமைகளை ஈடுகட்ட இழப்பை முன்னெடுத்துச் செல்ல உங்களை அனுமதிக்கிறது. தாமதமாக தாக்கல் செய்தால், இந்த சாதகமான பலனை இழக்க நேரிடும்.