IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Champions Trophy 2025 IND vs BAN: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் வங்கதேசத்துடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் அணி தெளகித்தின் சதத்தின் உதவியுடன் 229 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
ரோகித் அதிரடி தொடக்கம்:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்காக ரோகித் சர்மா அதிரடியான தொடக்கத்தை அளித்தார். ஆனால், 36 பந்துகளில் 41 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன்கில் ஆட்டம் தொடங்கியது முதலே எந்தவொரு பதட்டமுமின்றி நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அடித்தும் ஆடினார்.
சுப்மன் - கே.எல்.ராகுல்
இதையடுத்து, மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயரும் 15 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தனி ஆளாக அசத்திய சுப்மன்கில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஸ்ரேயஸ் விக்கெட்டிற்கு பிறகு வந்த அக்ஷர் படேல் 8 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த கே.எல்.ராகுல் - சுப்மன்கில்லுடன் இணைந்து அடுத்து விக்கெட்டுகள் விழாமல் ஆடினர்.
சதம் அடித்த சுப்மன்கில்; இந்தியா மிரட்டல் வெற்றி:
குறிப்பாக, சுப்மன்கில் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தை சதமாக மாற்றினார். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு தந்த கே.எல்.ராகுல் 3 ரன்களே தேவைப்பட்டபோது சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 231 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது முதலே வெற்றி இந்திய அணியின் வசமாகவே இருந்தது. சுப்மன்கில் 129 பந்துகளில் 101 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 47 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அடுத்தடுத்து சதம்:
இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் சதம் விளாசியிருந்தார். தற்போது இந்த போட்டியிலும் சதம் விளாசியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். முன்னதாக இந்திய அணி பந்துவீசிய போது முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் 25 வயதான சுப்மன்கில் தனது 8வது சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும், தொடக்க வீரரும் கேப்டனுமாகிய ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது 11 ஆயிரம் ரன்களையும் எட்டினார்.

