Ajith - Vijay: தளபதிக்கு "தல" கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணி துபாயில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. முதன்முறையாக பங்கேற்ற இந்த பந்தயத்திலே 3வது இடம் பிடித்து அசாத்தியமான சாதனையை அஜித்குமார் அணி படைத்துள்ளது. இந்த வெற்றியைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த அஜித்குமாருக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்:
துணை முதலமைச்சர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மாதவன், அர்ஜுன், சமந்தா என பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தாலும் நடிகர் விஜய் அஜித்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் இருந்தது. ஆனால், நடிகர் விஜய் அஜித்திற்கு தற்போது வரை வாழ்த்து தெரிவிக்கவே இல்லை. அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து அஜித்திற்கு எந்தவொரு வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.
நீங்க எப்போ வாழப்போறீங்க?
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் செய்திகள் என்ற பக்கத்தில் இருந்து மட்டும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பக்கம் தவெக-வின் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதற்கான ஆதாரங்களும் இல்லை. அரசியல் களத்தில் விஜய் கால்தடம் பதித்துள்ள நிலையில், சக போட்டியாளராக இருந்தாலும் தனக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித்திற்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் விஜய் நடிகர் அஜித்திற்கு தொலைபேசி வாயிலாக ஏதேனும் வாழ்த்து தெரிவித்தாரா? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகாவில்லை.
துபாய் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் அளித்த பேட்டியில், விஜய் வாழ்க.. அஜித் வாழ்க.. என்று கூறிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போ வாழப் போறீங்க? என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார். அஜித்தின் இந்த அறிவுரை இணையத்தில் வைரலாகியது. அஜித்தின் இந்த அறிவுரை விஜய்க்கு ஏதும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
சக நடிகர்களின் ரசிகர்கள் வாக்குகள்:
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். திரையுலகைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக உள்ளனர். ஆனால், இருவரும் குடும்ப நண்பர்களாக உள்ளனர். அரசியல் களத்தில் புகுந்துள்ள நடிகர் விஜய்க்கு சக நடிகர்களின் ரசிகர்களின் வாக்குகளும் மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனாலும், இணையத்தில் நடக்கும் சில ஆரோக்கியமற்ற மோதல்கள் அவரது வாக்கு சதவீதத்தைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.