சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.... கட்டுக்கட்டாக சிக்கிய பணம்... திணறிய அதிகாரிகள்
சார்பதிவாளர் சூர்யா உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் இடைத்தரகளிடம் மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 98 ஆயிரம் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து விசாரணை.
விழுப்புரம்: விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய மூன்று மணி நேர சோதனையில் கணக்கில் வராத ரூ.98 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழகத்தில் பல்வேறு சார்பதிவாளர் மற்றும் பத்திரபதிவு அலுவலகங்களில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆங்காங்கே திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த தகவலின்படி விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி (பொறுப்பு) வேல்முருகன் தலைமையிலான 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.
ரூ.98 ஆயிரம் பணம் பறிமுதல்
சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்ற அதிகாரிகள் அலுவலக கதவை மூடிக்கொண்டு யாரும் வெளியே செல்லாதவாறு சோதனையிட்டனர். அப்போது அங்கு இருந்த ஊழியர்கள் மற்றும் சில இடைத்தரகர்களிடமிருந்து பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் சூர்யா உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் இடைத்தரகளிடம் மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.98 ஆயிரம் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புதுறை போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து பத்திரபதிவிற்கு அதிகப்படியான லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், இன்று டி.எஸ்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அலுவலகத்தின் நுழைவு வாயில் பூட்டி வைத்து உள்ளிருக்கும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு ஒவ்வொருவராக வெளியே அனுப்பி வைக்கின்றனர்.
2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்
முகூர்த்த நாள் என்பதால் அதிகப்படியான பத்திரப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருந்தனர் 6 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை செய்தபோது அதில் கணக்கில் வராத இரண்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சார் பதிவாளர் வேல்முருகனிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்