விழுப்புரத்திற்கு வருகை தரும் முதல்வர்.. அலெர்ட் ஆகும் அதிகாரிகள் - காரணம் என்ன?
திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை முதல்வர் திறந்துவைக்க உள்ளார்
விழுப்புரம்: தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் வருகை புரிந்து முதலில் எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டினையும் பின்னர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை திறந்துவைக்க உள்ளார்.
திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம்
வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டினை இன்று (14.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்பின்னர், வனத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் 02.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் கூட்டத்தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
மேலும், சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின், நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில், 1.12.0 ஹெக்டேர் பரப்பளவில், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காசு பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கான நினைவு அரங்கம் 545.00 ச.மீ பரப்பளவில், ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் அரங்கம், நூலகம் மற்றும் பராமரிப்பாளர் அறை, பொதுகழிப்பறை போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம் 782.00 ச.மீ பரப்பளவில், ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம், பராமரிப்பாளர் அறை, பொதுகழிப்பறை போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நினைவு அரங்கம் மற்றும் மணிமண்டபம் கட்டுமானப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டினை பார்வையிடப்பட்டது. தற்பொழுது எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டு பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.
பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க முதல்வர் வருகை
எனவே, விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் வருகை புரிந்து முதலில் எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டினையும் பின்னர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை திறந்து வைப்பதோடு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்கள் என வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.
மேலும், விழுப்புரம் மாவட்டதிற்கு வருகை தரும் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொள்வர் என்பதால் அதிகாரிகள், அலுவலக கோப்புகளை தயாரிக்கும் பணியில் உள்ளனர்.