இரவு நேர போக்குவரத்தில் மாற்றம்! கோவைவாசிகள் கவனத்திற்கு! | முழு விவரம் உள்ளே!
கோவை அவிநாசி சாலை மேம்பால பணிக்காக இரவு நேர போக்குவரத்து தடை – ஜூலை 9 முதல் 13 வரை

கோவை அவிநாசி மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஹோப் காலேஜ் பகுதியில் மேம்பால இணைப்பு பணி நடைபெறவுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை போக்குவரத்து மாற்றம், அவிநாசி சாலை மேம்பாலம் இரவு நேர தடை அறிவிப்பு.
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 12 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப்பணி துவங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. அதன் இறுதிக் கட்டமாக ஹோப் காலேஜ் பகுதியில் இரயில்வே பாலத்தின்மேல் இரும்பு மேல்தளம் அமைத்து மேம்பாலத்தை இணைக்கும் பணி நடைபெறவுள்ளது. இப்பணிகள் காரணமாக ஜூலை 9 ஆம் தேதி இரவு முதல் 13 ஆம் தேதி இரவு வரை தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பயனியர் மில் சந்திப்பு முதல் கோவை மருத்துவக் கல்லூரி வரை இருபுறமும் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
கனரக வாகனங்கள், வெளியூர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள்:
கோவை மாநகரில் இருந்து வெளியே செல்லும் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி இராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் வழியாக L&T பைபாஸ் ரோடு வழியாகவோ அல்லது ஜி.பி சிக்னல், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி வழியாகவோ அவிநாசி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்:
நகரிலிருந்து வெளியே செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பயனியர் மில் சந்திப்பில் இடது புறம் திரும்பி ரொட்டிக்கடை மைதானம், காந்தி மாநகர், தண்ணீர்பந்தல், டைடல் பார்க் வழியாக சென்று அவிநாசி சாலையை அடையலாம்.
மாநகருக்குள் வரும் வாகனங்கள் கனரக வாகனங்கள், வெளியூர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் :
கோவை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் தொட்டிபாளையம் பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது சித்ரா சந்திப்பில் யு டர்ன் செய்து காளப்பட்டி ரோடு, நால்ரோடு, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது நீலம்பூரிலிருந்து L&T பைபாஸ் ரோடு வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம் வழியாகவோ நகருக்குள் வரலாம்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள்:
கோவை மாநகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சித்ரா சந்திப்பு அல்லது கொடிசியா சந்திப்பு அல்லது சி.எம்.சி சந்திப்பில் வலது புறம் திரும்பி டைடல் பார்க், தண்ணீர்பந்தல், காந்திமாநகர், ரொட்டிக்கடை மைதானம், பயனீர் மில் வழியாக அவிநாசி சாலையை அடைந்து நகருக்குள் வரலாம். சிங்காநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவிநாசி சாலையில் வராமல், L&T பைபாஸ் ரோடு, சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர் வழியாக சிங்காநல்லூரை அடையலாம்.

சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பெர்க்ஸ் பள்ளி, ஜி.வி ரெசிடென்சி, ஃபன்மால் வழியாக பயனீர்மில் சந்திப்பை அடைந்து காந்தி மாநகர், தண்ணீர்பந்தல் வழியாக அவிநாசி சாலையை அடைய வேண்டும். அல்லது ஒண்டிபுதூர் L&T பைபாஸ், நீலம்பூர் வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
இந்தப் போக்குவரத்து மாற்றங்கள் ஜூலை 9 ஆம் தேதி இரவு முதல் 13 ஆம் தேதி இரவு வரை தினமும் இரவு 11.00 மணியில் இருந்து காலை 6 மணி வரை செயல்படுத்தப்படும்.
எனவே, மேம்பால இணைப்பு பணியின் காரணமாக செய்யப்பட்டுள்ள இந்த இரவு நேர போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து போக்குவரத்து மாற்றத்திற்கேற்ப தங்களது பயண வழித்தடங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





















