மேலும் அறிய
Advertisement
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு ;குற்றவாளிகள் 8 பேரை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய நீதிபதி உத்தரவு
அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யபட்ட நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை சிபிசி ஐ டி போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரனை செய்ய விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி உத்தரவு.
விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் எழுந்துள்ள சர்ச்சையான புகார்களை தொடர்ந்து அந்த ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் நடந்த உண்மை சம்பவம் என்ன? அங்கு மொத்தம் எத்தனை பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர், அவர்களில் எத்தனை பேர் மாயமாகி உள்ளனர், யார், யாரெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை கண்டறிய கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க 3 நாட்கள் அனுமதி கேட்டு கடந்த 23-ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் வைத்தியநாதன் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக விழுப்புரம் வேடம்பட்டு மற்றும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரையும் போலீஸ் வேனில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து வந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது கைதான அவர்களில் ஜூபின்பேபியின் வலது கையில் கட்டுப்போடப்பட்டிருந்ததை பார்த்த நீதிபதி புஷ்பராணி, ஜூபின்பேபியிடம் எதனால் கட்டு போட்டு உள்ளீர்கள், ஏதேனும் காயமா? என்று கேட்டார். அதற்கு ஜூபின்பேபி, குரங்கு தன்னை கடித்ததால் ஏற்பட்ட காயம் என்றார். அப்போது உண்மையிலேயே குரங்கு கடித்ததால்தான் காயம் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் அடித்ததால் ஏற்பட்ட காயமா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு உண்மையிலேயே குரங்கு கடித்து விட்டதால்தான் காயம் ஏற்பட்டதாக ஜூபின்பேபி கூறினார்.
இந்த காயம், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக ஏற்பட்டதா? அல்லது அதற்குப்பிறகு ஏற்பட்டதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாகவே காயம் ஏற்பட்டதாக ஜூபின்பேபி கூறினார். அப்படியானால் ஜூபின்பேபிக்கு சிகிச்சை அளித்தது எந்த மருத்துவமனை டாக்டர் என்று கேட்ட நீதிபதி புஷ்பராணி, அந்த டாக்டர் அளித்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கூறினார். அதன்படி சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் ரேவதி ஆஜராகி, ஜூபின்பேபிக்கு அளிக்கப்பட்ட டாக்டரின் மருத்துவ சிகிச்சைக்கான சான்றிதழை சமர்ப்பித்தார்.
மேலும் இச்சம்பவத்தில் எத்தனை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற நீதிபதி கேட்டதற்கு, ஏற்கனவே 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. வசம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டதையடுத்து நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று காவல் ஆய்வாளர் ரேவதி கூறினார். இதை தொடர்ந்து ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரிடமும் வேறு யாருக்கும் எந்தவொரு காயமும் இல்லையே என்று நீதிபதி கேட்டார். அதற்கு அவர்கள் 8 பேரும் தங்கள் உடலில் எந்தவொரு காயமும் இல்லை என்றனர். அதோடு உங்கள் 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு அவர்கள் 8 பேரும் ஆட்சேபனை ஏதும் இல்லை என்றனர்.
இதையடுத்து ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி அனுமதி வழங்கினார். மேலும் இந்த விசாரணை முடிந்து மீண்டும் 28-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்குள் 8 பேரையும் தற்போதைய நிலையிலேயே கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 8 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் 8 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர்கள் 8 பேரையும் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை பெற உள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில் இதுவரை ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், வெளிமாநிலங்களுக்கு எத்தனை பேர் அனுப்பி வைக்கப்பட்டனர், ஆசிரமத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் மாயமாகி உள்ளனர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் யாரேனும் ஆசிரமத்தில் இருந்து தப்பிக்கச்சென்று இறந்துள்ளனரா என்பன போன்ற இன்னும் பல விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion