வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லிப்டில் சிக்கிய 9 பேர் - மீட்கப்பட்டது எப்படி?
மின்சாரம் இல்லாததால் லிப்ட் பாதியில் நின்றது. இதில் சிக்கிய 9 பேரை சிலமணி நேர போராட்டங்கள் பிறகு மீட்கப்பட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக்கள் அளிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்தனர். ஆனால் தேர்தல் விதி நடைமுறையில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பெட்டகம் வைக்கப்பட்டுள்ளதில் பொதுமக்கள் மனுக்களை செலுத்தி விட்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் பின்புறம் மின் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கிருந்து தான் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்குமான மின்வினியோகம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நண்பகல் 12 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சாலை விளக்குகள் பழுதடைந்துள்ளதால் மின் விளக்குகளுக்கான மின் இணைப்பு பழுது பார்க்கும் பணி கட்டுப்பாட்டு அறையிலுள்ள மின்மாற்றியில் நடைபெற்று வந்துள்ளது.
லிப்டில் சிக்கிய பொதுமக்கள்
அப்போது பணியில் ஊழியர் சந்தோஷ் என்பவர் ஈடுபட்டு பழுதினை சரிசெய்து வந்துள்ளார். அப்போது திடீரென மின்மாற்றியில் தீ ஏற்பட்டது. அப்போது சந்தோஷிற்கு தீயினால் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு இருந்த சகஊழியர்கள் அவரை மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகங்களுக்கான திடீரென்று மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஏ பிளாக்கில் இரு லிப்ட்டுகளும் மின்சாரம் இல்லாமல் நின்றன. இதில் ஒரு லிப்டில் 9 பேர் சிக்கிக்கொண்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் லிப்டிலே சிக்கி இருந்த நிலையில் சுமார் 20 நிமிடம் போராட்டங்களுக்குப் பிறகு லிப்ட் சாவி மூலம் லிப்ட் திறக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.