“பசிக்கு திருடினேன், திருந்திட்டேன், இன்னைக்கு என் வாழ்க்கையை சீரழிச்சிட்டாங்க! கதறிய இளைஞர்” - நடந்தது என்ன?
“அப்போ திருந்தாமல் இருப்பது நல்லதா? தினமும் 4 செயினை அறுக்கனும். போலீஸ் தேடாம இருக்குமா? எல்லாமே போச்சு, என் காலை உடைச்சிட்டாங்க, கைய உடைச்சிட்டாங்க, அனாதையா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”
குற்ற வழக்கில் சம்மன், கதறிய இளைஞர்:
நெல்லை மாநகர் கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது போடப்பட்ட வழக்கு ஒன்றில் வாய்தாவுக்கு ஆஜராகுபடி சம்மன் அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சம்மன் நகலோடு வந்த அவர் வாசலில் போலீசார் முன்பு ரகளையில் ஈடுபட்டார். அப்போது தேவையில்லாமல் ஒருவருடன் என்னை வழக்கில் சேர்த்துவிட்டு அவனுடன் சேர்ந்து கோர்ட்டில் நான் நின்றால்..! அவன் கூலிப்படை கூலிக்காக கொலை செய்யும் மதவக்குறிச்சிகாரன். இவன் கூட சேர்த்துவிட்டுட்டீங்களேமா! இவன் கூட போய் நான் நின்றால் வெளியே வரும் போது அவனுக்கு வெளியே 10 பேர் இருப்பான், என்னை எப்படி இடைஞ்சல் செய்யாமல் இருப்பான்? என கேட்டு கதறினார்.
தினமும் 4 செயினை அறுக்கனுமா? திருந்த விடமாட்டீங்களா?
அப்போது போலீசார் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர், ஆனால் அவர் காவல்துறையினர் உன்னை சேர்க்கவில்லை என்று சொல்லிவிட்டு இன்னைக்கு சம்மன் அனுப்பிருக்காங்க, எனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று புலம்பினார். தொடர்ந்து தான் அணிந்திருந்த பனியன் சட்டையை கழட்டி வீசி அரை நிர்வாணத்துடன் கூச்சலிட தொடங்கினார். என்னை சீரழித்து விட்டனர். ஒன்றுக்கு 30 கேஸ் சிட்டிக்குள்ள போட்டு இருக்காங்க என் மேல. என் வயசுல 15 வருடம் ஜெயில் வாழ்க்கை தான் தெரியுமா? 38 வயதாகிறது இன்னும் கல்யாணம் முடிக்கல. என் வாழ்க்கையை சீரழித்து விட்டனர். பசிக்கு திருடினேன். ஆனால் அதை என்னுடைய பொழப்பாவே ஆக்கிட்டாங்க..! இன்னைக்கு நான் திருந்தி நல்லா இருக்கேன். திருந்தி இருக்கும் எனக்கு ஏன் இந்த இடைஞ்சல்..! அப்போ திருந்தாமல் இருப்பது நல்லதா? தினமும் 4 செயினை அறுக்கனுமா? பணத்தை திருடனுமா? அப்படீனா போலீஸ் தேடாம இருக்குமா? எல்லாமே போச்சு, என் கால, கைய உடைச்சிட்டாங்க, இப்போ அனாதையா வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கதறி அழுது புலம்பி தள்ளினார்.
”இன்னும் கல்யாணம் ஆகல, குடும்பம் இல்லாமல் புத்தி இல்லாமல் அலையுறேன்”
முன்னதாக பிளேடால் கையை அறுத்துக்கொண்டு வந்த நிலையில் அங்கிருந்த காவலர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து இன்று வாய்தா உள்ளது, அதற்குள் என்னை ரிமாண்ட் செய்ய போகிறீர்களா? செய்யுங்கள் இதே கூத்து தான் அங்கையும் நடக்கும் என்று புலம்பியவரிடம் அங்கிருந்த காவலர் காலையிலேயே தண்ணிய போட்டுட்டியா ? என்று கேட்க தண்ணி போட்டா தான உங்கட்ட இப்படி பண்ண முடியும் என்று ஆவேசமடைந்தார் அந்த இளைஞர். குறிப்பிட்ட ஒரு காவலரை பார்த்து என் வாழ்க்கையை சீரழித்த ஆள் தான நீயெல்லாம்? இன்னைக்கு குடும்பம் இல்லாமல் புத்தி இல்லாமல் அலைந்து கொண்டு இருக்கிறேன் என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அருண்குமார் ஆட்சியர் அலுவலக வாசலில் ரகளையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.