பிச்சை எடுப்பதில் தகராறு - ராமேஸ்வரத்தில் வயதான கணவன், மனைவி அடித்து கொலை
’’இரண்டு நாட்களுக்கு முன் வேல்முருகன் - ராமு தம்பதிக்கும் உடன் பிச்சை எடுத்து வருபவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது’’
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி ஏராளமான யாசகர்கள் இங்கு பிச்சை எடுத்து வருகின்றனர். இவர்கள் வயதானவர்கள் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பிச்சை எடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெரு, கிழக்கு கோபுர வாசல் ஆகிய பகுதிகளில் வரும் யாத்திரைகளிடம் பிச்சை பெற்று கொண்டு பல வருடங்களாக இங்கு வாழ்க்கையை நடத்துகின்றனர். இவர்களில் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி ராமு விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டியை சேர்ந்த இவர்கள் இருவரும் பல வருடங்களாக பிச்சை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்களுக்கும் இவரின் கூட பிச்சை எடுத்து வருபவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது. இதனை கண்ட அருகிலிருந்த சக யாசகர்கள் இவர்களை தடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
நெல்லை பள்ளி கட்டட விபத்து - இரண்டாவது நாளாக முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
இந்த நிலையில் நேற்று இரவு கிழக்குக் கோபுர வாசல் பகுதியில் உள்ள யாத்திரிகள் தங்கும் மண்டபத்தில் தூங்க சென்ற இருவரும் காலை 9 மணி ஆகியும் வெளியில் வராத நிலையில் சந்தேகம் அடைந்த சக யாசகர்கள் அங்கு சென்று பார்த்தபோது ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு உள்ளவர்கள் கோயில் அலுவலரிடம் தெரிவித்ததை அடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஏ.எஸ்.பி தீபக் சுவாச் தலைமையிலான காவல்துறையினர் கொலை நடந்த இடத்திற்கு வந்து விசாரித்தபோது இவருடன் பிச்சைசெய்தவர்கள் இவர்கள் இருவரையும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவந்தது. இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொலைகாரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாவத்தை போக்க, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரம் வந்து புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பிறவி பலனை அடைவதாக நம்பும் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் பிள்ளைகளால் கைவிடப்பட்டதாலும், வறுமை காரணமாகவும் குடும்பத்தின் சூழ்நிலை கருதியும் கோவிலில் தங்கி பிச்சைபெற்று உயிர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு பிச்சை எடுத்து உயிர் வாழ்பவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு இரண்டு உயிரை காவு வாங்கி உள்ள சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.