’பிரசவ வலியை அறியாமல் கதறிய மனநலம் பாதித்த பெண்’- பிரசவம் பார்த்த பெண் போலிஸ்...!
’’மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, குடித்து விட்டு, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியதும், அவரால் பேசமுடியாததால், இத போன்ற செயலில் ஈடுபட்டேன் என்று தெரிவித்தான்’’
தஞ்சாவூர் கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரை, சாரங்கபாணி சுவாமி கோயிலின் பினபுறமுள்ள மண்டபத்தின் ஒரத்தில், ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அங்கேயே பல ஆண்டுகளாக தங்கியுள்ளார். அவர் யாரிடம் பேசாமலும், யாசகமும் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு ஏதும் செய்யாமல் அங்கேயே இருந்துள்ளார். யாராவது பரிதாபப்பட்டு, அவருக்கு உணவு கொடுத்தால் மட்டுமே வாங்கி சாப்பிடுவார். கந்தலாடையான நைட்டியை மற்றும் அணிந்திருப்பார். அவருக்கு அருகில் பொது மக்கள் யாராவது பரிதாபப்பட்டு கொடுத்த பழைய சேலைகள் மற்றும் துணிகளுடன் அங்கேயே படுத்தும், தங்கியிருப்பார்.
இந்நிலையில், பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரைக்கு மேற்கு காவல் நிலைய போலீஸ் சுகுனா என்பவர், அவ்வழியாக பணி நிமித்தாக சென்றார். அப்போது அந்தப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதால், நின்று கொண்டிருந்தார். மண்டபத்தின் ஒரத்தில், மனநலம்பாதிக்கப்பட்ட பெண் சுவரில் சாய்ந்து கொண்டு முனகி கொண்டும், அப்பகுதி முழுவதும் ரத்தவழிந்தோடியது. இதனை பார்த்த போலீஸ் சுகுணா, அருகில் சென்ற பார்த்த போது, பிரசத்தால் துடிப்பதை உணர்ந்தார். பிரசவ வலியை பற்றி தெரியாமல் கதறமுடியாமல் தவித்து வந்ததை பார்த்த போலீஸ் சுகுணா, உடனடியாக மேற்கு காவல் நிலையத்துக்கு வந்து அங்கிருந்த சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டும், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக அங்கு சென்று பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவத்தை பார்த்து முதலுதவி செய்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மேற்கு காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பேபி, காவல் நிலையத்தில் தன்க்காக வைத்திருந்த தரமான இரண்டு சேலைகளை கொண்டு வந்து அந்த பெண் மீது போர்த்தி அவரை பாதுகாப்பாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, அங்கேயே குழந்தையுன் தொப்புள்கொடியை துண்டித்து, மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பெண்ணை சேர்த்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்த பெண்ணிடமிருந்து எந்தவித தகவலையும் பெறமுடியாததால், இதுகுறித்து காவல் ஆய்வாளர் பேபி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவுக்கு தகவல் கொடுத்தார். ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்த இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலையத்தின் பெண் போலீஸார் அனைவரும் அங்கு சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றியதை கேட்டு எஸ்பி ரவளிப்பிரியா பாராட்டினர்.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பெற காரணமாக இருந்தவனை, போலீஸார் தேடி வந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒரே இடத்தில் இருந்ததால், இது போன்ற செயலை செய்து, இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியில் விசாரித்தனர். இதில் பாலக்கரையைச் சேர்ந்தவர் ஒருவர் அடிக்கடி வந்து அப்பெண்ணை சந்தித்தது தெரியவந்ததும், தினந்தோறும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அருகில் உணவு கொடுப்பது போல், நெருங்கி பழகி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அவரை பற்றி விசாரித்த போது, கும்பகோணம், பாலக்கரையை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான் (40) என்பது தெரிய வந்தது. உடனே அவரிடம் விசாரணை செய்த போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, குடித்து விட்டு, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியதும், அவரால் பேசமுடியாததால், இத போன்ற செயலில் ஈடுபட்டேன் என்று தெரிவித்தான். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆதரவற்ற மன நலம் பாதிக்க பெண்ணுக்கு, மனிதநேயத்தோடு பிரசவம் பார்த்ததும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண்ணுக்கு பிரசவம் பார்க்க உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் சரிதா, முதல் நிலை பெண் காவலர் சுகுனா ஆகியோரை தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஸ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில், நகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஆதரவற்றோர் இல்லம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதில் செயல்பட்டு வந்தது. இதில் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியுள்ள ஆதரவற்றகளுக்கு அடைகலம் கொடுத்து தங்கி வருகின்றனர். ஆனால் இது போன்ற மனநலம் பாதித்த பெண்கள், முதியவர்கள் போன்றவர்களை கண்டு கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் இருப்பது வேதனையான செயலாகும். இது போல் பல பெண்கள் மனநல்பாதித்த நிலையில் கும்பகோணம் பகுதியில் சுற்றித்திரிகிறார்கள். எனவே, நகராட்சி நிர்வாகம், காவல் துறையினர், உடனடியாக சுற்றித்திரியும் பெண்களை பாதுகாப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து, அவர்களது கர்ப்பையாவது பாதுகாக்க வேண்டும் என பொது மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.