TN Weather: மக்களே! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு - எப்போ தெரியுமா?
வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தற்போது வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இந்த வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற உள்ளது. இந்த வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து மழைப்பொழிவு அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கத்தை விட அதிகளவு மழை:
ஏற்கனவே அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை மற்றும் மிக கனமழை பல மாவட்டங்களில் பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் அதிகளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 1ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தமாக 77.5 மி.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 52.4 மி.மீட்டர் மழையே பதிவாகும். ஆனால், வழக்கத்தை விட அதிகமாக இந்த காலகட்டத்தில் மழை பதிவாகியுள்ளது. இயல்பில் இருந்து 48 சதவீதம் மழை அதிகளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்:
நடப்பாண்டிற்கான வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவு இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் மழை எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்நிலைகளின் நீர்மட்டத்தை கண்காணிப்பதுடன் அதன் கரைப்பகுதிகளை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்த மட்டில் வரும் டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவு அதிகளவு இருக்கும் என்பதாலும், சென்னை மாநகராட்சி மழைநீரை வெளியேற்றும் இயந்திரங்கள், படகுகள் ஆகியவற்றை தயார் நிலையில் ஏற்பாடு செய்துள்ளது.