CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் தேச விரோதிகள் யார்? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

CM Stalin: வடமாநிலங்களில் கழிவறைக்கு செல்ல கூட இந்தி அறிந்து இருக்க வேண்டும் என, அற்பக்காரணங்களை கூறுவதாக முதலமைச்சர் சாடியுள்ளார்.
யார் தேச விரோதிகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முரசொலி நாளிதழில் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் முதன்மையாக நிற்கும்.
வழக்குகள், சிறைவாசம், உயிர்த்தியாகம் எல்லாவற்றையும் தாங்கித்தான் தாய்மொழியாம் தமிழையும் தமிழர்களின் உரிமையையும் காக்கின்ற மகத்தான இயக்கமாகத் திமுக திகழ்கிறது. அதனால்தான், தி.மு.க ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள்–அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம்சாட்டு கிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழி வழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள்.
சமஸ்கிருதமயமாக்கல் திட்டம்:
முதல் மொழிப் போர்க்களத்தில் நாம் வெற்றி பெற்றாலும், போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில், இது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல. இந்தித் திணிப்பை முன்னே விட்டு, அதன் தொடர்ச்சியாக இந்த மண்ணை சமஸ்கிருதமயமாக்கும் சதித்திட்டத்துடன், தமிழ்ப் பண்பாட்டின் மீது நடத்த நினைக்கும் படையெடுப்பு இது.
இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே, கற்றுக்கொள்ளக்கூடாதா என்று கரிசனத்துடன் பேசுகிறவர்களிடம்,“சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழிலேயே கோவில்களில் அர்ச்சனை செய்யலாமா? தமிழும் செம்மையான மொழிதானே?”என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் அடையாளமும் அம்பலமாகிவிடும். அதனால்தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
தமிழில் திட்டமுடியாதா? - ஸ்டாலின்
நேரு போன்ற தலைவர்கள் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்தியாவை உருவாக்கினார்கள். இன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்கின்ற கட்சியின் தலைவர்கள் இந்தியைத் திணிப்பதும், அதை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதுமாக இருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்களோ, இந்தி தெரியாத தமிழர்களை நோக்கிவடமாநிலத்தவர்கள் திட்டினால் புரிந்துகொள்ளமுடியாது என்றும், வடமாநிலங்களுக்கு சென்றால் உணவகங்களில் ஆர்டர் பண்ண முடியாது என்றும், கழிவறை செல்வதற்குக்கூட இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் எல்லோரும் எள்ளி நகையாடும் வகையிலான அற்பக் காரணங்களைச் சொல்கிறார்கள்.
ரயில் பயணத்தில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியில் திட்டினால், பதிலுக்கு நம்மவர்கள் அவர்களைத் தமிழில் திட்ட முடியாதா? சுயமரியாதை உணர்வும் சூடும் சுரணையும் உள்ள தமிழர்கள் அப்படித்தான் செய்வார்கள். இங்குள்ள பா.ஜ.க. வினர் எப்படிப்பட்டவர்களோ!
திராவிடத்தின் பலன்
அந்தந்த மாநில ரயில் நிலையங்களிலும் அவரவர் தாய்மொழி முதன்மையாகவும், இந்தி எழுத்துகள் அடுத்ததாகவும், ஆங்கிலம் மூன்றாவதாகவும் இருக்கிறதென்றால் அதற்கு திராவிட இயக்கம் முன்னெடுத்த மொழிப் போராட்டமே காரணமாகும். தமிழை மட்டுமல்ல, இந்தி ஆதிக்கத்திடமிருந்து மற்ற மாநிலத்தவர்களின் தாய்மொழியையும் காப்பதற்கு திராவிட இயக்கத்தின் உறுதியான இந்தி ஆதிக்க எதிர்ப்புணர்வே முதன்மையாக உள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

