IPL CSK vs MI: செஞ்சு விட்ட சென்னை! கடைசியில் மிரட்டிய சாஹர்! வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே?
IPL CSK vs MI: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

mumbai indians vs chennai super kings: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நடப்பு தொடரின் முதல் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
அடுத்தடுத்து விக்கெட்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திரா, தீபக் ஹுடா, ஷிவம் துபே, ஜடேஜா, சாம் கரண், தோனி, அஸ்வின்,நூர் அகமது, நாதன் எல்லீஸ், கலீல் அகமது இடம்பிடித்துள்ளனர்.
கலீல் அகமது வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலே ரோகித் சர்மா டக் அவுட்டானார். அடுத்து ரிக்கெல்டன் - வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பவுண்டரிகளாக விளாசினார். ரியான் ரிக்கெல்டன் கலீல் அகமது பந்தில் போல்டானார். அவர் 13 ரன்களில் அவுட்டாக, அடுத்த சில நிமிடங்களில் வில் ஜேக்ஸ் 11 ரன்னில் அவுட்டானார்.
சுழல் தாக்குதல்:
36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு நன்றாக ஒத்துழைத்த காரணத்தால் கேப்டன் ருதுராஜ் அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது சுழல் கூட்டணியை பயன்படுத்தினார். இதனால், மும்பை அணி ரன் எடுக்கத் தடுமாறியது.
மும்பை அணிக்காக நிதானமாக ஆடி அதிரடிக்கு மாற முயற்சித்த சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 29 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராபின் மின்ஸ் களமிறங்கினார். அவர் நூர் அகமது சுழலில் 3 ரன்னில் அவுட்டானார்.
கடைசியில் கலக்கிய சாஹர்:
மும்பை அணியின் நம்பிக்கையாக இருந்த திலக் வர்மாவையும் நூர் அகமது காலி செய்தார். அவரது சுழலில் 25 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த திலக் வர்மா அவுட்டானார். தட்டுத்தடுமாறிய மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்த பிறகு 100 ரன்களை இழந்தது. மும்பை அணிக்காக கடைசியில் அதிரடியாக ஆட முயற்சித்த சான்ட்னரும் 12 பந்துகளில் 17 ரன்களுக்கு அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் சிக்ஸர் அடித்து மும்பைக்காக ரன் வேட்டை நடத்தினார். இதனால், மும்பை அணி 150 ரன்களை எட்டியது. 20 ஓவரின் முடிவில் சென்னை அணிக்கு மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. சாஹர் கடைசி வரை அவுட்டாகாமல் 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்தார். சென்னை அணிக்காக நூர் அகமது, கலீல் அகமது தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

