Breaking | குடியரசுத் தலைவரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்களின் முதல் அணி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டது. 54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள் உட்பட 88 பேர் கொண்ட அணியினரை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழியனுப்பி வைத்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்திய விளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர். ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் கருணாநிதியின் உருவப்படத்திறப்புக்கு குடியரசுத் தலைவரை அழைக்க டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள் - திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி
“பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்; மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் - கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்த நிலையில் - “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்” என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் கழகத்தினர் அனைவரும் அறிவீர்கள். அதன்பிறகு, கழகத்தினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
ஆகவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று கழகத்தினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டது.
பாலியை தொல்லை ஒழிய அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
பாலியல் தொல்லை குறித்து மாணவ - மாணவியர் அச்சமின்றி தகவல் தெரிவிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது - டி ராஜா வ் வலியுறுத்தல்
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா வலியுறுத்தியுள்ளார்.
நாளை நாடாளுமன்ற கூட்டத் தொடர் : சோனியா காந்தி முக்கிய ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் இடைகாலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.