Pongal 2025: களைக்கட்டிய சமத்துவ பொங்கல் விழா... குடும்பத்துடன் கொண்டாடிய காவலர்கள்
சேலம் மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடினர்.

சேலம் மாநகர காவல் துறை சார்பில் லைன்மேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாநகர காவல்துறை ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு மற்றும் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பானை உடைத்தல் போட்டி, மிதவேக மிதிவண்டி போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து விழாவையொட்டி நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் பரிசுகள் வழங்கினார்.
இதையும் படிங்க: Madurai : உசிலம்பட்டியில் இப்படியொரு கோயிலா.. வியந்து பாராட்டிய எம்.எல்.ஏ., ஐயப்பன்!
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்து, கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைத்த போது சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினர். இந்த விழாவில் ராட்டினம், கரகாட்டம், மாட்டுவண்டி பயணம், பரதநாட்டியம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சியின் போது காவலர்களும் உற்சாகத்தில் நடனமாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் விழா குறித்து மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு கூறும்போது, உணவுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இயற்கைக்கு நன்றி கூறும் விதமாக பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா கொண்டாட்டத்தின் மூலம் நமக்கு யார் உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற பண்பாடு உருவாகிறது என்ற அவர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடிவு காலம் பிறந்தாச்சு.. காஞ்சிபுரத்தில் பாலாறு குறுக்கே புதிய 100 கோடியில் பாலம்..
இதேபோன்று, சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த விழாவில், சேலம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கள் காவல்துறையினருக்கும், அவர்களது குழந்தைகளுக்கு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் பரிசுகள் வழங்கிய பாராட்டப்பட்டது.

