Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
கரூரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், குழந்தைகள், ஆடு, மாடுகள் மற்றும் பொதுமக்களை துரத்தி கடித்து வருகிறது. இது தொடர்பாக, அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட செல்லுமீரான் நாகர் பகுதியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி என்ற சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெறிநாய் ஒன்று சிறுவனை துரத்தி துரத்தி கடித்துள்ளது. அப்போது வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறி துடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் நாயை துரத்தி விட்டு காயமடைந்த சிறுவனை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது சிறுவன் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சூழலில் தான் அந்த சிறுவனை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளப்பட்டி பகுதியில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து பள்ளப்பட்டி நகராட்சி இடம் கூறினால் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மேல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.





















