விடிவு காலம் பிறந்தாச்சு.. காஞ்சிபுரத்தில் பாலாறு குறுக்கே புதிய 100 கோடியில் பாலம்..
Kanchipuram Palar River Bridge: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலாறு குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு உலக புகழ் பெற்ற நகரமாக இருந்து வருகிறது. அதேபோன்று கோவில் நகரமாகவும் காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் பிரசித்தி பெற்ற பழமையான கோயில் என்பதால், ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்களுக்கு சொர்க்க பூமியாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும் இருப்பதால், பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் காஞ்சிபுரத்தில் குடியேறுவதும் அதிகரித்து வருகிறது. இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றது. தொழிற்சாலைகளுக்கு செல்பவர்களும் காஞ்சிபுரம் வழியாக செல்வதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.
காஞ்சிபுரம் பாலாறு மேம்பாலம்
அதிகளவு பொதுமக்கள் காஞ்சிபுரத்திற்கு வருவதால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பாலாறு அமைந்துள்ளது. இந்தப் பாலாற்றின் குறுக்கே, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், சென்று வருகின்றன.
செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக வந்தவாசி, திண்டிவனம், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேத்பட், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்தப் பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர். பாலாறு பாலம் மிக மோசமாக சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மாமா நீங்க நல்லா இருக்கீங்களா...விஷாலிடம் கொஞ்சி பேசிய சிறுவன்
வாகனங்கள் அதிகரிப்பு:
காஞ்சிபுரத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவு ஏற்படுகிறது. சில நேரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில் புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியது.
இதையும் படிங்க: Ajithkumar Car Race: துபாய் ரேஸில் அஜித் அணி அபார வெற்றி! முதல் முயற்சியிலே 3வது இடம் - துள்ளிக்குதிக்குறாரே!
புதிய செவிலிமேடு பாலாறு பாலம்
செவிலிமேடு பாலாறு குறுக்கே புஞ்சைஅரசன் தாங்கல் பகுதியிலிருந்து செவிலிமேடு வரை, சுமார் 900 மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. பாலத்தின் அகலம் 7.5 மீட்டராக இருக்கும். இருபுறம் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் இருபுறமும் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. அதிகாரிகள் நேரடியாக சென்று இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து, பாலம் அமைப்பதற்கு முதற்கட்ட மண் பரிசோதனையும் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது மண் பரிசோதனை முடிவடைந்து அதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அடுத்த கட்ட பணிகள்
பாலத்தின் திட்ட முழு திப்பீடு, பாலம் அமைப்பதற்கான வரைபடம், பாலம் அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு, பாலாறு பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

