Tata Compact SUV: 10 லட்சம்தான் விலை.. 3 புதிய காம்பேக்ட் எஸ்யூவி களமிறக்கும் டாடா - என்னென்ன?
டாடா நிறுவனம் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் 3 புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் கார் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் டாடா முக்கியமான நிறுவனம் ஆகும். டாடா-வின் பல்வேறு மாடல்கள் இந்திய சாலைகளில் கம்பீரமாக உலா வருகின்றன.
டாடா தற்போது மின்சார வாகனங்களிலே அதிகளவு கவனத்தைச் செலுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் 30 வகையான கார்களை அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக மிகவும் சொகுசான காம்பேக்ட் எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. அந்த 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. Tata Scarlet:
டாடா நிறுவனம் சியாரா காரின் மாடலில் இருந்து உத்வேகம் அடைந்து உருவாக்கி வரும் கார்தான் டாடா ஸ்கார்லெட். இந்த கார் ஐசி எனப்படும் இன்டர்னல் கம்பூஸ்சன் எஞ்ஜினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் ஓடும் வகையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மின்சார வாகனமாகவும் இந்த கார் பின்னாட்களில் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2. New Gen Tata Nexon:
டாடா நெக்சன் வரிசையில் வர உள்ளது நியூ ஜென் டாடா நெக்சன். இதன் புனைப்பெயராக கருடா என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா நெக்சனின் டிசைன் மற்றும் உள்கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்து இந்த காரை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். காம்பேக்ட் எஸ்யூவி காரான இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் காராக சந்தைக்கு வர உள்ளது. கார் சன்ரூஃப் மேற்கூரையுடன் விற்பனைக்கு வர உள்ளது.
3.Tata Punch Facelift:
டாடா பஞ்ச் ஃபேஸ்லிப்ட் தற்போது முழுமூச்சில் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டாடா பஞ்ச் டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக உள்ளது. காம்பக்ட் எஸ்யூவி-யாக இந்த காரை சந்தைக்கு கொண்டு வர டாடா திட்டமிட்டுள்ளது. காரின் டிசைன் மற்றும் உள்கட்டமைப்பில் பல்வேறு சிறப்பம்சங்களை டாடா மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
டாடா தயாரித்து வரும் இந்த 3 மாடல் கார்களும் அடுத்த ஓராண்டிற்குள் சந்தைக்கு வர உள்ளது. இந்த கார்கள் இந்திய சந்தையில் டாடாவின் மதிப்பை மேலும் உயர்த்தும் என்றே கருதப்படுகிறது. டாடா நிறுவனத்திற்கு போட்டியாக ஹுண்டாய், மஹிந்திரா, கியா போன்ற நிறுவனங்களும் தங்களது போட்டி கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.





















