Minister Udhayanidhi Stalin: ’நான் முதல்வன்’ மூலம் இளைஞர்களுக்கு வேலை வழங்கிய நிறுவனங்கள்: அமைச்சர் உதயநிதி பாராட்டு
Minister Udhayanidhi: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை பாராட்டி அமைச்சர் உதயநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன் திட்டம்’ மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக, முன்னணி தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை எம்.ஆர்.சி நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடினர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை பாராட்டி அமைச்சர் உதயநிதி நினைவுப் பரிசு வழங்கினார். இந்த நிகழ்வின் போது, சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை ஷெராந்தி தாமஸுக்கு ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ சார்பில் ரூ.8 லட்சம் நிதியுதவியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கினார். மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு யார் வேண்டுமானாலும் எளிதில் நிதியளிக்கிற வகையில் QR Code-ஐ இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட்டார்.