அமைச்சர்களுக்கு டிரஸ் கோட் இருக்கா? துணை முதல்வர் உதயநிதி டி-சர்ட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பரபர
அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி டி-சர்ட் அணிந்து வருவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அமைச்சர்களுக்கு என தனி டிரஸ் கோட் இருக்கிறதா என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி டி-சர்ட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி-சர்ட் அணிந்து செல்வது பேசுபொருளாகியுள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னம் இருக்கும் டி-சர்ட்டை அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மரபுக்கு எதிரானது என அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கூறியிருந்தார்.
உதயநிதி டி-சர்ட் அணியலாமா?
துணை முதலமைச்சர் உதயநிதி டி-சர்ட் அணிந்து வருவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. உதயசூரியன் சின்னம் இருக்கும் டி-சர்ட்டை அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு எதிராக சென்னை சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் சத்ய குமார் மனு தாக்கல் செய்தார்.
அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய ஆடை விதிகள் தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி, வெளியிடப்பட்ட அரசாங்க ஆணைக்கு (G.O.) இணங்குமாறு உதயநிதிக்கு உத்தரவிடக் கோரி சத்ய குமார் கோரிக்கை விடுத்தார்.
உயர் நீதிமன்றம் பரபர உத்தரவு:
இந்த அரசாணை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் பொருந்தாது என அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வழக்கை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அமைச்சர்கள் பின்பற்ற வேண்டிய ஆடை விதிகள் என ஏதேனும் இருக்கிறதா, அதுபற்றி தெரிய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாநில அரசின் சார்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் பெற்று கொண்டு, ஒரு வாரத்திற்குள் விரிவாக அவரது வாதங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
இதனிடையே, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டிய ஆடை விதிகளை நிர்ணயிக்க மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: Free CA Auditing Coaching: சிஏ, ஆடிட்டிங் தேர்வுகளுக்கு இலவச சிறப்பு பயிற்சி; உணவு, விடுதி வசதி உண்டு- அரசு அறிவிப்பு- விவரம்!