மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்
மூணாறு அருகே செல்லும்போது பேருந்து மற்றொரு வாகனத்தை முந்தும் போது எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதில் ஆசிரியை, கல்லூரி மாணவி, மாணவர் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி கணினி அறிவியல் துறை பயிலும் மாணவ மாணவிகள் 39 பேரும் 3 ஆசிரியர்களும் மொத்தம் 42 பேர் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கேரளா மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட மூணாறு அருகே செல்லும்போது பேருந்து மற்றொரு வாகனத்தை முந்தும்போது எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Seeman: விஜயுடன் கூட்டணியா..? - சீமான் சொல்வது என்ன?
விபத்தில் பேருந்தில் சென்ற ஆசிரியை வெனிகா, மற்றும் திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கணினி அறிவியல் பிரிவு மாணவி ஆதிகா ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மகிழ்ச்சியோடு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவ, மாணவியர்களின் பேருந்து விபத்தில் சிக்கி இரண்டு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி, சுதன் (19) என்ற மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாடா பொது மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

