Karur: மணல் குவாரிகளின் முறைகேடுகள்; தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
குவாரிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டும் லாரி உரிமையாளர்கள் மீது வாங்கல் காவல் நிலையத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கரூரில் அமைந்துள்ள தனிமம் மற்றும் கண்காணிப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நன்னியூர் புதூர் மணல் குவாரியில் லாரி உரிமையாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். லாரிகள் 8 நாட்கள் காத்திருப்பதை குறைத்து இரண்டு நாட்களில் மணல் வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான லாரிகளில் லோடு எடுத்துக்கொண்டு நேரடி விற்பனையில் ஈடுபடுவதை தடுத்து GPRS கருவி பொருத்த வேண்டும். தேசிய பெர்மிட் லாரிகள் மற்றும் 12 வீல் லாரிகள் மூலம் மணல் எடுப்பதை தடுக்க வேண்டும். மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
8 நாட்கள் தொடர்ந்து லாரி ஓட்டுநர்கள் டர்ன் பாய்ண்டில் காத்திருக்கக்கூடிய சூழ்நிலையால் தன் குடும்பத்தை வாரக்கணக்கில் பிரிந்து, மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், குவாரிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டும் லாரி உரிமையாளர்கள் மீது வாங்கல் காவல் நிலையத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் மாதம் 6ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்